‘‘ஆபத்தில் சிக்க வைத்த அழகு’’ - பாக் சிறையில் இருந்து விடுதலையான இந்தியர் அன்சாரி குமுறல்

‘‘ஆபத்தில் சிக்க வைத்த அழகு’’ - பாக் சிறையில் இருந்து விடுதலையான இந்தியர் அன்சாரி குமுறல்
Updated on
1 min read

‘‘சமூகவலைதளத்தில் பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் என்னை பாகிஸ்தான் சிறையில் தள்ளியது. இதற்காக பாகிஸ்தான் அதிகாரிகளை கூட நான் குறை சொல்ல விரும்பவில்லை. எனக்கு ஏற்பட்ட நிலைக்கு நான் தான் காரணம்’’ என பாக் சிறையில் இருந்து விடுதலையான இந்தியர் அன்சாரி கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ஹமித் நிஹல் அன்சாரி (33). இவர் சமூக வலைதளத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி உள்ளார். அவரைப் பார்க்கும் ஆவலில் கடந்த 2012-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது பாகிஸ்தானின் போலி அடையாள அட்டை வைத்திருந்ததாகவும் உளவு பார்த்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

ஏறக்குறைய 3 ஆண்டுகள் விசாரணைக் கைதியாக இருந்த அன்சாரிக்கு, 2015 டிசம்பர் 15-ம் தேதி ராணுவ நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து, அவர் பெஷாவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அன்சாரியின் சிறை தண்டனை கடந்த 15-ம் தேதியுடன் முடிந்தது. பாகிஸ்தான் சிறையில் மொத்தம் 6 ஆண்டுகள் இருந்த அன்சாரி இரு தினங்களுக்கு முன்பு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் அவரை பாகிஸ்தான் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்தநிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அன்சாரி பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது

‘‘எந்த தவறும் செய்யாமல் பாகிஸ்தானில் நான் சிறையில் அடைக்கப்பட்டேன். அதற்கு நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. எனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களுக்கு முழு பொறுப்பும் நானே.

சமூகவலைதளம் மூலமாக ஏற்பட்ட தொடர்பால் பெண்ணின் அழகில் மயங்கி, பாகிஸ்தானுக்கு சென்றதே காரணம். சிறையில் அடைக்கப்பட்ட பிறகு தான் நான் எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டேன் என்பது தெரிய வந்தது. ஆனால் தவற்றை உணர்ந்து நான் திருந்தி அழுதாலும் அதனை கேட்க பாகிஸ்தான் அதிகாரிகள் தயாரில்லை. எனக்காக போராடிய இந்திய அதிகாரிகள், உறவினர்கள், தாய்க்கு நன்றி சொல்லுகிறேன். நான் செய்த தவறும், எனக்காக குரல் கொடுத்தவர்களின் உண்மையான அன்பை புரிந்து கொள்ள முடிந்தது’’ எனக் கூறினார்.  

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in