Last Updated : 12 Aug, 2014 09:48 AM

 

Published : 12 Aug 2014 09:48 AM
Last Updated : 12 Aug 2014 09:48 AM

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்: 8 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு

கர்நாடகத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் 8 நாட்களுக்குப் பிறகு திங்கள் கிழமை அதிகாலை சடலமாக மீட்கப்பட்டான்.

பாகல்கோட்டை மாவட்டம், சுலிகேரி கிராமத்தை சேர்ந்த ஹ‌னுமந்தப்பா ஹ‌ட்டியின் மகன் திம்மண்ணா (6). இச்சிறுவன் கடந்த 3-ம் தேதி 350 அடி ஆழமுள்ள‌ ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். 172 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் மற்றும் மண்டியா மாவட்ட அவசரகால மீட்பு படையினர் ஈடுபட்டனர்.

இவர்கள் கட‌ந்த 8 நாட்களாக போராடி 160 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டின‌ர். பின்னர் அதிலிருந்து சிறுவன் சிக்கியிருந்த பகுதிக்கு அடிப்பக்கம் வரை துளையிட்டனர்.

இதையடுத்து, ஆழ்துளை கிணற்றின் அடிப்பகுதியில் இருந்து மேல் நோக்கி காற்று வேகமாக செலுத்தப்பட்டது. இதன் மூலம் 172 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனின் உடல் மெல்ல மெல்ல மேலே வந்தது. திங்கள்கிழமை அதிகாலை 1.15 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து உடல் மீட்கப்பட்டது.

சிறுவனின் உடலை கண்டு அவனது பெற்றோரும்,உறவினரும் கதறி அழுதனர். தொடர்ந்து மருத்துவ அதிகாரிகள் சிறுவனின் உடலை பரிசோதித்தனர். பின்னர் அருகிலேயே சிறுவனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ரூ. 1 கோடி செலவு

இதனிடையே கடந்த 8 நாட்களாக நடைபெற்ற மீட்பு பணியில் 512 பேர் ஈடுபட்டதாகவும், ரூ.1 கோடியே 15 லட்சம் செலவானதாகவும் பாகல்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சிறுவனின் குடும்பத்துக்கு கர்நாடக அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. தோண்டப்பட்ட நிலத்தை சீரமைத்து தருவதாகவும் உறுதி அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x