

சபரிமலையில் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் நுழைய முயன்ற இந்து வலது சாரி பெண் தலைவரை கைது செய்த பெண் போலீஸாருக்கு ரொக்கப்பரிசுகளை கேரள போலீஸ் அறிவித்துள்ளது..
கடந்த மாதம் 16-ம் தேதி இந்து ஐக்கிய வேதி அமைப்பின் மாநிலத் தலைவர் கே.பி. சசிகலாவை கைது செய்தமைக்காக இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து கேரள மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாகத் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இந்து வலதுசாரி அமைப்புகளும், பாஜகவினரும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 16-ம் தேதி இந்து ஐக்கிய வேதி அமைப்பின் தலைவர் கே.பி. சசிகலா இருமுடிகட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல முயன்றார். ஆனால், சபரிமலைக்குப் பெண்கள் சாமிதரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி அவர் கோயிலுக்கு வந்தார்.
ஆனால், சபரிமலையில் பதற்றமான சூழல் நிலவுவதால், சசிகலா அங்கு சென்றால், சட்டம் ஒழுங்கில் சிக்கல் ஏற்படும் எனக் கூறி அவரை போலீஸார் தடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்து மரக்கூட்டம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அதன்பின் சசிகலா போலீஸ் எச்சரிக்கையை மீறி சபரிமலைக்கு செல்ல முயன்றதால் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சபரிமலையில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் முயற்சியில் சசிகலாவை கைது செய்த பெண் போலீஸார் இருவருக்கு ரூ.1000 ரொக்கப்பரிசும், 8 போலீஸ் கான்ஸ்டபிளுக்கு ரூ.500 ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து கேரள போலீஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்ட நிலையிலும் அங்குச் செல்ல முயன்று சட்டம் ஒழுங்கு சிக்கலை ஏற்படுத்த சசிகலா முயன்றார். அவரிடம் போலீஸார் சூழலை எடுத்துக்கூறியும் அவர் மறுத்துவிட்டார். இதனால், போலீஸார் சசிகலாவை தங்கள் கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவந்து கைது செய்தனர். பெண் போலீஸாரின் துணிச்சலான நடவடிக்கையைக் கேரள போலீஸ் பாராட்டுகிறது. முதல்முறையாக சபரிமலையில் பெண் போலீஸார் நியமிக்கப்பட்டு அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்குவெகுமதி அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.