

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி கந்ததாஸை மத்திய அரசு நியமித்தது தவறான முடிவு என்று பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி கருத்துத் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கிக்கும், மத்தி அரசுக்கும் இடையே பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்து உரசல் இருந்து வந்தது. ஆனால், அது வெளியே தெரியாமல் இருந்த நிலையில், கடந்த மாதம் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா பேச்சில் உரசல் இருப்பது வெளியானது.
ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் கூடுதல் இருப்புத் தொகையை மத்திய அரசு கேட்பதாக தகவல் வெளியானதையும் மத்திய அரசு மறுத்தது. மேலும், எப்போதும் இல்லாத வகையில் ஆர்பிஐ சட்டத்தைப் பயன்படுத்தி ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலை அழைத்து இந்த விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்பி அழைத்துப் பேசியது. இந்தச் சம்பவங்களால் ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கும் இடையிலான உறவில் உரசல் இருந்து வந்தது.
இந்தச் சூழலில் கடந்த இரு நாட்களுக்கு முன் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக உர்ஜித் படேல் அறிவித்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக தான் பதவி விலகுவதாக அவர் தெரிவித்திருந்தார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், முன்னாள் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி கந்த தாஸை புதிய ஆளுநராக மத்திய அரசு நியமித்தது.
தமிழகத்தின் ஐஏஎஸ் கேடரில் தேர்வான சக்தி கந்த தாஸ் தமிழக அரசின் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். அதன்பின் சக்தி கந்ததாஸ் மத்திய பணிக்கு மாற்றப்பட்டார்.
மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்த நேரத்தில் அரசின் பல்வேறு அறிவிப்புகளை ஒருங்கிணைத்து வெளியிட்டவர் சக்தி தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்தி கந்த தாஸ் நியமனத்துக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களுக்க இன்று டெல்லியில் அளித்த பேட்டியில், “ ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்தி கந்த தாஸை நியமித்தது தவறான முடிவு. ப.சிதம்பரத்துடன் நெருக்கமாக இருந்து பல்வேறு முறைகேடு செயல்களில் ஈடுபட்டு, அவர்களை நீதிமன்ற வழக்குகளில் இருந்து காப்பாற்றியவர் சக்தி கந்த தாஸ். எதற்காக இதை அவருக்குச் செய்தார் என்பது எனக்குத் தெரியாது. மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதி இருக்கிறேன் “ எனத் தெரிவித்துள்ளார்.
உர்ஜித் படேல் ராஜினாமா குறித்து சுப்பிரமணியன் சுவாமி, கருத்துக் கூறுகையில் “ இந்த நேரத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் ராஜினாமா செய்வது, அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும், பொருளாதாரத்துக்கும் சரியானது அல்ல. தேசத்தின் நலன்கருதி அந்தப் பதவியில் உர்ஜித் படேலே பிரதமர் மோடி தக்கவைத்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து. தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வாக படேல் தெரிவித்திருந்தாலும் அவரை அழைத்துப் பேசி தேசத்தின் நலனுக்காக அவரைப் பணியாற்ற செய்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.