Last Updated : 12 Dec, 2018 08:51 AM

 

Published : 12 Dec 2018 08:51 AM
Last Updated : 12 Dec 2018 08:51 AM

ராஜஸ்தானில் முதல்வர் யார்?- சச்சின் பைலட், அசோக் கெலாட் இருவரில் யாருக்கு வாய்ப்பு? இன்று முடிவு

ராஜஸ்தானில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அங்கு முதல்வரைத் தேர்வு செய்யும் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், மற்றும் இருமுறை முதல்வராக இருந்த அசோக் கெலாட் ஆகிய இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கப்போகிறது என்பது தெரியவில்லை. இருவரும் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியிடம் தங்களின் கருத்தைத் தெரிவித்து இருப்பதால், இன்று முடிவு தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தானில் உள்ள 199 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜகவை தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி 101 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

ஆட்சியில் இருந்த பாஜக 73 இடங்களில் மட்டுமே வென்று தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து முதல்வர் வசுந்தரா ராஜே தனது ராஜினாமா கடிதத்தை நேற்று மாலை ஆளுநர் கல்யாண் சிங்கைச் சந்தித்து அளித்தார்.

இதுதவிர பகுஜன் சமாஜ் கட்சி 6 இடங்களிலும், பாரதிய பழங்குடி கட்சி 2 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி 3 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக் தள ஒரு இடத்திலும், சுயேட்சை உறுப்பினர்கள் 12 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 39.3 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளநிலையில் யார் அங்கு முதல்வராகப் பதவி ஏற்பது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

2 முறை முதல்வராக இருந்த மூத்த தலைவர் அசோக் கெலாட்டுக்கு வாய்ப்பு கிடைக்குமா, ராகுல் காந்திக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் சச்சின் பைலட்டுக்கு முதல்வர் வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை. இன்று காலை 11 மணி அளவில் நடக்கும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும், பொறுப்பாளர் கே.சி. வேணுகோபாலைச் சந்திக்க உள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அவினாஷ் பாண்டே கூறுகையில், “ ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை11 மணி அளவில் நடைபெற உள்ளது. அப்போது முதல்வர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும். எம்எல்ஏக்களிடம் கருத்துக் கேட்கப்படும். அதன்பின் அந்த முடிவு ராகுல் காந்தியிடம் தெரிவிக்கப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் நேற்று வெற்றி பெற்ற மாநிலங்களில் முதல்வர்கள் யார் என்று நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறுகையில், “ பாஜகவை ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் தோற்கடித்து இருக்கிறோம். முதல்வரைத் தேர்தவு செய்வதில் எந்தவிதமான குழப்பமும், சிக்கலும் இருக்காது. மிகவும் எளிதாக, சமூகமாகத் தேர்வு இருக்கும்” எனத் தெரிவித்தார்.

ராஜஸ்தானில் அசோக் கெலாட், மற்றும் சச்சின் பைலட்டுக்கு இடையே போட்டி இருப்பது போல, சத்தீஸ்கரில் டி.எஸ். சிங் தியோ, மூத்த தலைவர் சரண் தாஸ் மஹந்த், மாநிலத் தலைவர் பூபேஷ் பாகெல், தம்ரத்வஜ் சாஹு ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாத், மூத்த தலைவர் ஜோதிர்தியா சிந்தியா ஆகியோர் இடையே போட்டி இருக்கிறது எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x