டெல்டா விவசாயிகள் வாழ்வாதாரம்: அதிமுக, திமுக எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

டெல்டா விவசாயிகள் வாழ்வாதாரம்: அதிமுக, திமுக எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு
Updated on
1 min read

டெல்டா விவசாயிகளின் வாழ்க்கையைப் பாதுகாக்க வலியுறுத்தி அதிமுக, திமுக எம்.பி.க்கள் இன்று கடும் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

காவிரியின் நதியின் குறுக்கே, மேகேதாட்டுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த வரைவுத் திட்டத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை தமிழ அரசு வலியுறுத்தி வருகிறது. காவிரி ஆணையக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பிரதிநிதிகளும் தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதையடுத்து தமிழக எம்.பி.க்கள் காவிரி விவகாரம் தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மாநிலங்களவை தொடங்கி சிறிதுநேரத்தில் அதிமுக, திமுக எம்.பி.க்கள் காவிரி விவகாரம் தொடர்பாக கோஷங்களை எழுப்பினார்கள். அதிமுக எம்.பி.க்கள் கையில் பதாகைகளை ஏந்திக் கொண்டு, காவிரி டெல்டா விவசாயிகளைக் காக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது, திமுக எம்.பி.க்களும் சேர்ந்து கோஷங்களை எழுப்பி அவையின் மையப்பகுதிக்கு வந்தனர்.

இதனால், அவையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. அவையைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழல் நிலவியது. அப்போது மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இருக்கைக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். பல்வேறு கட்சிகள் முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேச நோட்டீஸ் அளித்துள்ளதால் அது குறித்துப் பேச வேண்டும். ஆதலால், அமைதியாக இருக்கையில் அமருங்கள் என்று திமுக, அதிமுக எம்.பி.க்களை அவர் கேட்டுக்கொண்டார்.

ஆனால், மற்ற விவகாரங்களை ஒத்திவைத்துவிட்டு காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் அவைத்தலைவரிடம் வலியுறுத்தினார்கள். ஆனால், விதி 267-ன்கீழ் எந்த விவகாரத்தை உடனடியாக எடுக்க முடியாது. அனைத்து விவகாரங்களும் முறைப்படிதான் விவாதிக்க முடியும். ஆதலால், உறுப்பினர்கள் இருக்கையில் அமரலாம் என்று வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

ஆனால், அதற்கு தமிழக எம்.பி.க்கள் செவி சாய்க்காமல் அவையைத் தொடர்ந்து நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்டனர். இதனால், குழப்பம் ஏற்பட்டதால், அவையை நண்பகல் வரை ஒத்திவைத்து அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டார்.

முன்னதாக, அவை தொடங்கியவுடன் முன்னாள் அமெரிக்க அதிபர் சீனியர் புஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், விளையாட்டு வீராங்கனைகள் சோனியா சாஹல், சிம்ரன்ஜித் கவுர், லோலினா போரோஹெயின் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in