

பாஜகவுக்கு பெருகிவரும் மக்கள் செல்வாக்கை கண்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சுவதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் நேற்று மூன்று இடங்களில் ரத யாத்திரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இதற்கு மேற்கு வங்க அரசு அனுமதி அளிக்க வில்லை. இதனை எதிர்த்து பாஜக தாக்கல் செய்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், மேற்கு வங்க அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு பாஜக சார்பில் நேற்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தி யாளர்களிடம் அமித் ஷா கூறிய தாவது:
மேற்கு வங்கம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. எனவே, பாஜகவை கண்டு திரிணமூல் காங்கிரஸாரும், அதன் தலைவர் மம்தா பானர்ஜியும் பயப்படுகிறார்கள். இது இயல்பானதுதான். இந்த அச்சத்தின் காரணமாகவே, மேற்கு வங்கத்தில் பாஜக ரத யாத்திரைக்கு மம்தா பானர்ஜி அனுமதி வழங்கவில்லை. இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.