

நாடாளுமன்ற தேர்தலில் புனே மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக இந்தி நடிகை மாதுரி தீட்சித் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு 2019-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என தெரிகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சியை கைபற்ற முழு வீச்சில் இறங்கியுள்ளது. அதேசமயம் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸூம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என பிரபலமானவர்களை களம் இறங்கி அதிக தொகுதிகளை கைபற்றும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. இதற்காக பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சில மாதங்களுக்கு முன்பு நாடுமுழுவதும் பல மாநிலங்களில் பிரபலங்களை சந்தித்தனர். சச்சின் டெண்டுல்கர், மலையாள நடிகர் மோகன்லால் உட்பட பலரையும் பாஜகவினர் சந்தித்தனர்.
பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித்தை மும்பையில் அமித் ஷா சில மாதங்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். இதன் தொடர்ச்சியாக வரும் மக்களவை தேர்தலில் புனே தொகுதியில் மாதுரி தீட்சித் களமிறக்க பாஜக திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில் ‘‘குஜராத் முதல்வராக மோடி பதவியேற்ற முதல் தேர்தலில் பிரபலங்களை நிறுத்தியதன் மூலம் அதிக தொகுதிகளை பாஜக கைபற்றியது. வரும் மக்களவை தேர்தலிலும் அதே பாணியை பின்பற்ற முடிவு செய்துள்ளோம்.
கடந்த தேர்தலில் புனே தொகுதியை காங்கிரஸிடம் இருந்து பாஜக கைபற்றியது. அங்கு பாஜகவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இருப்பினும் செல்வாக்கு மிக்க நபர்களை நிற்க வைப்பதன் மூலம் அதிகமான வாக்குகளை பெற முடியும்’’ எனக் கூறினார்.