

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள மாலின் கிராமத்தில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 68 ஆக உயர்ந்தது.
பலத்த மழையால் குன்றுகளில் நிலச்சரிவு ஏற்பட்டு அதிலிருந்து பெயர்ந்த பாறைகளும் மண்ணும் விழுந்ததால் கிராமமே மண் மேடிட்டுவிட்டது. அதில் 44 வீடுகள் சிக்கிவிட்டன. 160 பேர் புதைந்து விட்டனர்.
இடைவிடாது மழை பெய்தாலும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் 3-வது நாளாக வெள்ளிக்கிழமையும் ஈடுபட்டனர்.
இதுவரை 27 ஆண்கள், 31 பெண்கள், 10 குழந்தைகள் பலியானதாக மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டு அறை தகவல் கொடுத்துள்ளது. காயம் அடைந்த நிலையில் 8 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.