

ஜம்மு காஷ்மீரில், பாஜக மற்றும் பிடிபி எனப்படும் மக்கள் ஜனநாயக கட்சிகள் கூட்டணியாக ஆட்சி செய்தன. ஆனால், கடந்த மாதம் முதல்வர் மெகபூபா முப்தி தலைமையிலான பிடிபி கட்சிக்கு அளித்துவந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது.
இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதியில் இருந்து ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடந்து வருகிறது. சட்டப்பேரவையை ஆளுநர் முடக்கி வைத்திருந்தார். ஆளுநரின் 6 மாத ஆட்சிக் காலம் டிசம்பர் 18-ம் தேதியோடு முடிவடைய உள்ளது.
இந்தநிலையில், பிடிபி கட்சி, எதிர்க்கட்சிகளான, தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. மற்றொரு பக்கம் மக்கள் மாநாட்டுக் கட்சி பாஜக ஆதரவுடன், மற்ற கட்சிகளின் துணையுடனும் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.
இதனால் குதிரை பேரத்துக்கு வழிவக்கும் எனக் கூறி சட்டப்பேரவையைக் கலைத்து ஆளுநர் நேற்று இரவு அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து சட்டப்பேரவை கலைக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் சத்தியபால் மாலிக் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
குதிரை பேரத்தை தடுப்பதற்காகவே சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. அரசியல் கருத்தில் முரண்பாடு கொண்ட கட்சிகளால் நிலையான ஆட்சியை அமைக்க இயலாது. சாத்தியமற்ற சூழ்நிலை நிலவுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தேவையற்ற அரசியல் குழப்பத்தை தவிர்க்கவும், மோதல்கள் ஏற்படாமல் இருக்கவுமே இந்த முடிவு எடுக்கப்பட்டது. சட்டப்பேரவை கலைக்கப்பட்டுள்ளதால் விரைவில் தேர்தல் நடத்தப்படும். ஆட்சியமைக்க உரிமைகோரி பேக்ஸ் அனுப்பியாக கூறுகின்றனர். அதுபோன்ற பேக்ஸ் எதுவும் எனக்கு வரவில்லை. அப்படியே வந்தாலும் எனது முடிவில் மாற்றமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.