Published : 12 Nov 2018 11:35 AM
Last Updated : 12 Nov 2018 11:35 AM

கர்நாடகாவில் இருந்து மத்திய அரசியலில் முத்திரை பதித்த முகம்: யார் இந்த ஆனந்த் குமார்?

1959-ம் ஆண்டு, ஜூலை 22-ம் தேதி பெங்களூருவில் உள்ள நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் ஆனந்த் குமார். கர்நாடகத்தில் இருந்து இளம் வயதிலேயே பாஜகவின் மத்திய அரசியலில் நுழைந்த பெருமையைப் பெற்றவர். தனது 39-ம் வயதிலேயே அடல் பிஹார் வாஜ்பாயின் அமைச்சரவையில் இடம் பிடித்தார்.

விமானத்துறை, சுற்றுலாத்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை, கலாச்சாரம், நகர்ப்புற வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல துறைகளை வகித்தவர். தற்போது மோடி அமைச்சரவையில் மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றவர், நாடாளுமன்ற விவகாரத்துறையையும் கவனித்து வந்தார்.

தொடர்ந்து 6 முறை

1996-ல் இருந்து தொடர்ந்து 6 முறை பெங்களூரு தெற்கு தொகுதியில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர். எல்.கே.அத்வானியின் ஆதரவால் ஆனந்த்குமாருக்கு மத்தியில் செல்வாக்கு அதிகரித்தது.

சங்க் பரிவாரின் ஏபிவிபி மாணவர் அமைப்பின் மூலம் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கினார் ஆனந்த்குமார். படிப்படியாக ஏபிவிபியில் உயரத் தொடங்கிய ஆனந்த்குமார் தேசியத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தார். 1987-ல் பாஜகவில் இணைந்து, மாநில செயலாளர், யுவ மோர்ச்சா மாநிலத் தலைவர், பொதுச் செயலாளர், தேசியச் செயலாளர் ஆகிய பொறுப்புக்களை வகித்தார்.

கர்நாடகாவில் பாஜகவை வளர்த்தவர்

மாற்றுக் கட்சிக்காரர்களையும் தன்பால் ஈர்த்து தன் மாநிலத்தில் பாஜகவை வளர்த்தவர் ஆனந்த் குமார். அவர் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும்போதுதான் முன்னாள் முதல்வர் எஸ்.பங்காரப்பா பாஜகவில் இணைந்தார். ஒருமுறை 40 எம்எல்ஏக்களுடன் பாஜக தடுமாறியபோது, தனிப்பெரும்பான்மை மிக்க கட்சியாக பாஜகவை மாற்றியவர். எடியூரப்பாவும் குமாரும் சேர்ந்து நீண்ட காலம் கட்சியின் இரண்டு தூண்களாக விளங்கினர்.

டெல்லியில் பெங்களூரு மனிதர் என்று புகழப்பட்ட ஆனந்த்குமார், ஐக்கிய நாடுகள் சபையில் முதன்முதலில் கன்னடத்தில் பேசிய தலைவர் எனும் பெருமையைப் பெற்றவர் என்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x