

மன்னார்குடி பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர் தேர்தல் குறித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதி மன்றம் ரத்து செய்துள்ளது.
மன்னார்குடி பஞ்சாயத்து யூனியன் 5-வது வார்டில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தெர்தலில் அதிமுக சார்பில் சேகரும், திமுக சார்பில் சுப்பையனும் போட்டியிட்டனர். இதில் 18 வாக்குகள் வித்தியாசத்தில் சேகர் வெற்றி பெற்றார்.
அவருக்கு தேர்தல் அதிகாரி வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கி, அறிவிப்பு வெளியிட்டார்.
ஆனால், மாநில தேர்தல் ஆணைய இணைய தளத்தில், திமுக வேட்பாளர் சுப்பையன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், சுப்பையன் வெற்றி பெற்றதாக இணையதளத்தில் தவறுதலாக அறிவிக்கப்பட்டு விட்டது என்றும், இத்தவறுக்கு காரணமாக இருந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிடும்படியும், சேகர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்பையன் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தலை ரத்து செய்தது. மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சேகர் மனு தாக்கல் செய்தார். மறு தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் நரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. சேகர் சார்பில் வழக்கறிஞர் சி.பரமசிவம் ஆஜராகி வாதிட்டார்.
மறுதேர்தல் நடத்துமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்தனர்.