Last Updated : 12 Nov, 2018 01:00 PM

 

Published : 12 Nov 2018 01:00 PM
Last Updated : 12 Nov 2018 01:00 PM

கவனம்...துப்பினால் துடைக்கணும்; புனே நகராட்சி புதிய எச்சரிக்கை

பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படுவது மட்டுமல்லாமல்,  துப்பியவர் அந்த இடத்தையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று புனே நகராட்சி உத்தரவிட்டுள்ளது.

புனே நகராட்சியின் இந்த உத்தரவால் புனே நகரவாசிகள் புகையிலை, பான்மசாலாவை வாயில்போட்டு கண்ட இடங்களில் எச்சிலை துப்பமுடியாமல் திணறி, உரிய இடங்களில்  தேடி துப்புகின்றனர்.

வடமாநிலங்களில் அரசு அலுவலக சுவர்கள் மட்டுமின்றி பொது இடங்கள் அனைத்திலும் மக்கள் பான்மசாலா, பாக்கு, புகையிலை ஆகியவற்றை வாயில் மென்று கண்ட இடங்களில் எச்சில் துப்புவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் சுகாதாரக்கேடு உருவாகி புனே நகராட்சிக்குச் சுத்தம் செய்வது பெரும் தலைவலியை ஏற்படுத்த வந்தது.

இதைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 31-ம் தேதி முதல் பொது இடங்களிலும், சுவர்களிலும் எச்சில் துப்பி அசுத்தம் செய்பவர்களுக்கு 150 ரூபாய் உடனடி அபராதமும், குப்பைத் தொட்டியில் குப்பைகளைப் போடாமல் சாலையில் வீசுபவர்களுக்கு ரூ.180 அபராதமும், பொது இடங்களை கழிப்பிடமாக பயன்படுத்துபவர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கையில், கடந்த 3-ம் தேதி முதல் 156 பேர் வரை சிக்கினார்கள். அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஆனாலும், அபராதம் மட்டும் வசூலித்தால் போதாது, துப்பியவர்களே சுத்தம் செய்யும் நடவடிக்கையை புனே நகராட்சி நிர்வாகம் கடந்த 5-ம் தேதி முதல் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

இது குறித்து புனே நகராட்சி அதிகாரி தியானேஸ்வர் மோலக் நிருபர்களிடம் கூறியதாவது:

புனே நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பொது இடங்களில் எச்சில் துப்புவதை குறைக்கும் முயற்சியில் இறங்க அபராதம் விதித்தோம். ஆனால், அபராதம் விதிப்பதைக் காட்டிலும், இன்னும் கடுமையாக்க எச்சில் துப்புபவர்களே அந்த இடத்தைச் சுத்தம் செய்யவும் உத்தரவிட்டுள்ளோம்.

அதுமட்டுமல்லாமல், சுத்தம் செய்பவர்களை புகைப்படம் எடுத்து பொது இடங்களிலும் ஒட்டுவதற்கு முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் மக்கள் பொது இடங்களில் எச்சில் துப்பி அசுத்தம் செய்வதை தவிர்ப்பார்கள்.

முதல்கட்டமாக பீபிவாடி, அனுத், ஏரேவாடா, கசாபா, கோலே சாலை ஆகிய பகுதிகளில் அமல்படுத்தி இருந்தோம், இனிமேல் இந்த விதிமுறை 15 வார்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் 15 சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

கடந்த 8 நாட்களில் 156 பேர் பொது இடங்களில் எச்சில் துப்பி சிக்கிக்கொண்டார்கள். அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. புனே நகரைச் சுத்தமாக வைத்து ஸ்வச் சர்வேயில் முதலிடத்தைப் பிடிக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x