

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா சிவிசி அறிக்கையை சீலிட்ட உறையில் நவ.19 அன்று அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை நீக்க மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து இணை இயக்குநர் எம். நாகேஸ்வர் ராவ் இடைக்கால இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
தன்னிச்சை அமைப்பான சிபிஐயில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கம் அளித்த சிபிஐ, ''சிபிஐ அமைப்பின் இயக்குநர் பதவியில் அலோக் வர்மா தொடர்கிறார். சிறப்பு இயக்குநர் பதவியில் ராகேஷ் அஸ்தானா தொடர்கிறார். மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்'' என்று தெரிவித்திருந்தது.
தன்னை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியதை எதிர்த்து இயக்குநர் அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் அலோக் வர்மாவின் வழக்கை விசாரித்து வருகிறது.
இதுகுறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பின் (சிவிசி) அறிக்கையை அலோக் வர்மா, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
சில கூறுகளில் அலோக் வர்மாவுக்கு எதிரான சிவிசி அறிக்கை 'மிகவும் அசாதாரணமானது' என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவது அவசியம் என்று தெரிவித்துள்ளது.
அதேபோல, திங்கட்கிழமை அன்று (நவ. 19) அலோக் வர்மா தனது பதிலை சீலிட்ட கவரில் அளிக்க வேண்டும் என்றும், விசாரணை செவ்வாய்க்கிழமை (நவ.20) அன்று நடைபெறும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.