Last Updated : 16 Nov, 2018 05:39 PM

 

Published : 16 Nov 2018 05:39 PM
Last Updated : 16 Nov 2018 05:39 PM

‘‘கர்நாடகாவை அசுரர்கள் ஆள்வதால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது’’- ஜனார்த்தன ரெட்டி குற்றச்சாட்டு

கர்நாடகாவை அசுரர்கள் ஆள்வதால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தெரிவித்துள்ளார்.

கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டி நிதி நிறுவனம் மூலம் ரூ. 21 கோடி நிதி மோசடி செய்ததாக கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் நேற்று முன் தினம் இரவு ஜாமீனில் வெளியே வந்தார்.

இதுகுறித்து ஜனார்த்தன ரெட்டி நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவ‌து:

கடந்த 2006-ம் ஆண்டு முதல்வர் குமாரசாமி சம்பந்தப்பட்ட ரூ.150 கோடி முறைகேட்டை நான் அம்பலப்படுத்தினேன். இதனால் அவர் என் மீது மிகுந்த கோபத்தில் இருந்தார். கடந்த தேர்தலில் மொளகாளுமூரு, பாதாமி ஆகிய இரு தொகுதிகளில் என் நண்பர் ஸ்ரீராமலு போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக நான் தீவிர பிரச்சாரம் செய்தேன். இதனால் மஜத படுதோல்வி அடைந்தது.

இந்த இரண்டு சம்பவங்களையும் மனதில் வைத்துக்கொண்டு முதல்வர் குமாரசாமி என்னை 12 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்து விட்டார். இவ்வழக்கில் எனக்கு துளியும் சம்பந்தம் இல்லை. யாரிடமும் பொய் சொல்லி ரூ. 21 கோடி மோசடி செய்யவில்லை. ஆனால் என்னை பொய் வழக்கில் கைது செய்துள்ளனர். பல வழக்குகளைச் சந்தித்தப் பிறகு முழு நேர அரசியலில் இருந்து விலகி, என் குடும்பத்தினருடன் அமைதியாக வாழ்ந்து வருகிறேன்.

ஆனால் என்னை அவமானப்படுத்தும் வகையில் கைது செய்துள்ளனர். இந்த கைதை கர்நாடக அரசு ரசித்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் அசுரர்கள் ஆட்சி செய்வதால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பை வழங்குமாறு ஊடகம் மூலமாக உள்துறை அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன். சுரங்கத் தொழிலில் நேர்மையாக ஏராளமாக சம்பாதிக்கிறேன். மோசடி செய்ததாக கூறி என்னை அவமானப்படுத்த வேண்டாம். அமைதியாக இருக்கும் என்னை சீண்டினால், தக்கப் பாடம் கற்பிப்பேன்''என்றார்.

அரசு தலையிடவில்லை

இதுகுறித்து முதல்வர் குமாரசாமி கூறுகையில், '' ஜனார்த்தன ரெட்டி மீதான நிதி மோசடி வழக்கில், கர்நாடக அரசின் தலையீடு எதுவும் இல்லை. அவரை கைது செய்ய சொல்லி நானோ, சக அமைச்சர்களோ போலிஸாருக்கு ஆணையிடவில்லை. இதில் எங்களை குறை கூறுவது தவறு. அண்மையில் ஜனார்த்தன ரெட்டி  ரூ.18 கோடியை திருப்பதி கோயில் உண்டியலில் செலுத்தியதாக அவரது நண்பர் கூறியிருக்கிறார். இது  உண்மையா? என சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்க வேண்டும்''என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x