Published : 05 Nov 2018 03:58 PM
Last Updated : 05 Nov 2018 03:58 PM

சபரிமலை தந்திரி அலுவலகத்தில் ‘ஜாமர்’ கருவி: கேரள போலீஸ் திடீர் நடவடிக்கை

சபரிமலை தந்திரியை ஊடகவியலாளர்கள் தொடர்பு கொள்வதை தடுக்கும் பொருட்டு அவரது அலுவலகத்தில் மொபைல்போனை செயலிழக்கச் செய்யும் ஜாமர் கருவியை போலீஸார் பொருத்தியுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் கடந்த மாதம் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது.அப்போது, பெண்கள் பலர் சபரிமலைக்கு வந்தனர். அவர்களை ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

ஐந்து நாட்களுக்குப் பிறகு நடை மூடப்பட்டது. இந்நிலையில், சித்திரை திருநாள் ஆட்ட விசேஷ பூஜைக்காக இன்று ஒருநாள் சபரிமலை நடை திறக்கப்படுகிறது. மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை ஐயப்பன் கோயில் நடை திறந்திருக்கும்.

சபரிமலைக்கு பெண்கள் வர வாய்ப்பு இருப்பதால் போராட்டங்கள் நடைபெறுவதை தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் எதுவும் நேராமல் தடுக்க, சபரிமலையைச் சுற்றியுள்ள பம்பா, நிலக்கல், இலவங்கல், சன்னிதானம் போன்ற பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் கோயில் நடை திறக்கப்பட்டேபோது இளம் பெண்கள் சென்றால் சன்னிதானத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது தடை செய்யப்பட்ட வயது பெண்கள் கோயிலுக்குள் வந்தால் நடையை சாத்தி சுத்தி பூஜை செய்யப் போவதாக கோயில் தந்திரி அறிவித்தார்.

இதனை பல ஊடகங்கள் நேரலையாக ஒளிபரப்பின. இதனிடைய கோயில் நடை மாலை திறக்கப்படும் நிலையில் தந்திரியை தொடர்பு கொண்டு ஊடகங்கள் பேட்டி எடுக்க முயன்று வருகின்றன. மேலும் சில அரசியல் கட்சித் தலைவர்களும் தந்திரி மற்றும் கோயில் நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச முயலுவதாக கூறப்பட்டது.

இதையடுத்து சபரிமலை கோயில் அருகேயுள்ள தந்திரியின் அலுவலகத்தில் மொபைல் போன்களை முடக்கும் ஜாமர் கருவியை போலீஸார் பொருத்தியுள்ளனர். இதுகுறித்து கேரள அரசு சார்பில் விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x