

வாட்ஸ் அப் குரூப்பில் அனுமதியின்றி குடும்பத்தலைவியான இளம்பெண்ணை இணைத்து ஆபாச படங்களை பகிர்ந்ததாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் வாட்ஸ் அப் அட்மினை மும்பை போலீஸார் கைது செய்தனர்.
மும்பையில் இளைஞர்கள் பலர் 'Triple XXX' என்கிற பெயரில் வாட்ஸ் அப் குரூப் ஒன்றை ஆரம்பித்து அதில் ஆபாச படங்கள், காணொலிகளை தங்களுக்குள் ஷேர் செய்து வந்தனர். இந்நிலையில் மும்பை தாராவியில் வசிக்கும் குடும்பத்தலைவியான இளம்பெண் ஒருவரின் செல்ப்போன் வாட்ஸப்பில் அந்த குரூப் திடீரென முளைத்தது.
ஆரம்பத்தில் தனது பெண் தோழிகள் அவரை கேலி செய்வதற்காக இணைத்ததாக நினைத்து சாதாரணமாக இருந்துள்ளார். ஆனால் 'Triple XXX' குரூப்பில் இளம்பெண்ணை இணைத்ததால் அவருக்கும் மேற்கண்ட ஆபாசப்படங்கள், ஆபாச காணொளிகள் வரத்தொடங்கின.
இதனால் அந்தப்பெண் அதிர்ச்சியும், சங்கடமும் அடைந்தார். அவரது வாட்ஸ் அப் எண்ணின் டிபியில் அவரது புகைப்படம் இருந்ததால் அவரது எண்ணுக்கு தனிப்பட்ட முறையில் சிலர் ஆபாசப்படங்கள் அனுப்பத் தொடங்கினர், சிலர் போன் செய்து ஆபாசமாக பேசவும் செய்தனர்.
அவர்களை அந்தப்பெண் கண்டித்தப்போது அவர்கள் வாட்ஸ் அப் குரூப்பில் இருப்பாய் ஜாலியாக பேசினால் கோபப்படுவாயா என்று கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த பெண் மேற்கண்ட வாட்ஸ் அப்பை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து குரூப் அட்மின் மீது மும்பை தாராவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து அந்த குரூப் அட்மினை தேடிய போலீஸார் அவரைக் கைது செய்தனர். அவர் பெயர் முஸ்தாக் அலி ஷேக் (24) என்பதும், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என்பதும் தச்சுத்தொழில் செய்து வருவதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட குரூப் அட்மின் ஷேக் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நான் அந்த பெண்ணின் எண்ணை தெரிந்து இணைக்கவில்லை. என்னுடைய சித்தப்பா மகன் எண் என்று நினைத்துதான் இணைத்தேன். ஆனால், அந்த நம்பர் அந்தப்பெண்ணின் எண் என்பது எனக்குத் தெரியாது, அந்தப் பெண்ணின் எண் எப்படி வந்தது என்று தெரியவில்லை. அந்த குழுவில் வேறு பெண்களும் யாரும் இல்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் போலீஸார் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு எண்ணை இணைக்கும் முன் அதை தனது செல்போனில் காண்டாக்டில் சேர்த்து பெயர் பதிவு செய்து பின்னர்தான் குரூப்பில் இணைக்க முடியும். அந்தப்பெண்ணின் எண் வாட்ஸ் அப்பில் அவரது படத்தை வைத்துள்ளபோது எப்படி தெரியாமல் போகும் என்று கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அட்மின் மீது குற்றவியல் சட்டம் மற்றும் ஐடி ஆக்ட் 2000 கீழ் பிரிவு 67 மற்றும் 67-ஏ –ன் கீழ் மும்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் அவர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என தெரிகிறது.
மேலும் அந்தக் குழுவில் அந்தப்பெண்ணிடம் ஆபாசமாக பேசிய, வம்பிழுத்த மற்ற ஆண்களையும் போலீஸ் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் வலைதளங்களில் மோசமான சிந்தனைக் கொண்ட ஆண்கள் சிலர், போலி ஐடி மூலம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதும், மெசேஜ் அனுப்புவதும் நவீன குற்றங்களாக மாறிவருகிறது. இதன் வெளிப்பாடே இதுப்போன்ற சம்பவம்.