

பாஜக முன்னாள் தலைவர் ஜஸ்வந்த் சிங் (76) தனது வீட்டில் வழுக்கி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவர் கோமா நிலையில் உள்ளார்.
முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் வீடு டெல்லியில் உள்ளது. வியாழக் கிழமை இரவு அவர் வீட்டில் வழுக்கி விழுந்து மயங்கி கிடந்தார். அவரது குடும்பத்தினர் அவரை டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜஸ்வந்த் சிங்கின் உடல்நிலை மோசமாக உள்ளது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் கோமாவில் உள்ளார். உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று ஜஸ்வந்த் சிங்கின் உடல்நிலை குறித்து விசாரித்தனர். அவரது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அவர் விரைவில் குணமடைய கடவுளை பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலின்போது அவர் விரும்பிய பார்மர் தொகுதி (ராஜஸ்தான்) ஒதுக்கப்படாததால் அந்தத் தொகுதியில் சுயேச்சை யாகப் போட்டியிட்டார். இதைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மக்கள வைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.