ஒடிசாவில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: மூத்த தலைவர்கள் ராஜினாமா

ஒடிசாவில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: மூத்த தலைவர்கள் ராஜினாமா
Updated on
1 min read

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அபராஜிதா பாஜகவில் இணைந்ததால் ஒடிசா மாநிலத்தில் அக்கட்சியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் இருவர் இன்று அக்கட்சியில் இருந்து வெளியேறியுள்ளனர்.

1994-ஆம் ஆண்டு ஒடிசா பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அபராஜிதா சாரங்கி, கடந்த 2013-ஆம் ஆண்டு மத்திய அரசுப் பணிக்கு மாற்றம் பெற்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் இணைச் செயலராக பணியாற்றி வந்தார்.

சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற அவர், கடந்த 27-ம் தேதி பாஜகவில் இணைந்தார். பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பாஜகவின் ஒடிசா மாநில தலைவர் பசந்த் பண்டா ஆகியோர் உடனிருந்தனர்.

அபராஜிதா பாஜகவில் இணைந்தது ஒடிசா மாநிலத்தில் அந்த கட்சியில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர்கள் இருவர் இன்று அக்கட்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். முன்னாள் ஒடிசா அமைச்சரான பிஜாய் மகாபத்ரா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் திலிப் ராய் ஆகிய இருவரும் பாஜகவில் இருந்து வெளியேறுவதாக இன்று அறிவித்துள்ளனர்.

ரூர்கேலா தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் திலிப் ராய் தனது எம்எல்ஏ பதவியில் இருந்தும் விலகியுள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதுகுறித்து மகாபத்ரா புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவில் எனக்கு மிக மோசமான அனுபவமே கிடைத்துள்ளது. கட்சியை விட்டு வெளியேறுவதை தவிர எனக்கு வேறு வாய்ப்பில்லை. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நானும், திலிப் ராயும் ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in