

சுதந்திர தினத்தையொட்டி, வீரமரணமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு நாட்டின் உயரிய வீரதீர விருதான அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று காவல்துறையைச் சேர்ந்த 919 பேருக்கு வீரதீர விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சுதந்திர தினத்தையொட்டி, காவல்துறையில் சிறப்பாக பணிபுரிபவர்களுக்கு மத்திய அரசு விருதுகளை வழங்குகிறது. நடப்பாண்டு மொத்தம் 919 காவல்துறையினருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், வீரதீர செயலுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் (பிபிஎம்ஜி) 15 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. வீரதீர செயலுக்கான விருதுகள் (பிஎம்ஜி) பிரிவில் 163 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் எல். லட்சுமணனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புகழ்மிக்க சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது (பிபிஎம்) 82 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த சென்னை தெற்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் அப்பாஸ் குமார், ரயில்வே காவல்துறை ஐ.ஜி சீமா அகர்வால், ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.சரஸ்வதி ஆகிய மூவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு சேவைக்கான காவல்துறை விருது 659 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 19 பேர் பெறுகின்றனர்.
அசோக சக்ரா
ஜம்மு காஷ்மீர் மாநிலம் காஸிபத்ரி பகுதியில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி நடைபெற்ற ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் மூன்று தீவிரவாதிகளைக் கொன்று வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர, ஐஎன்எஸ் சிந்து ரத்னா நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் சக வீரர்களைக் காக்க முயன்ற சிப்பாய் விக்ரம் சிங், கடற்படை வீரர்கள் இருவர் உள்பட 12 பேருக்கு சூர்ய சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு அறிவிக்கப்பட்டுள்ள 55 வீரதீர விருதுகளில் தரைப்படைக்கு 39 சேனா விருதுகளும், கடற்படையில் ஒரு நாவோ சேனா விருதும், விமானப்படையில் 2 வாயு சேனா விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.