

ராஜஸ்தானில் வரும் 7-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பாஜக சார்பில் ஆல்வார் நகரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு விசாரணைக்கு வந்தபோது காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான ஒருவர், இந்த வழக்கு விசாரணையை 2019 வரை தள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மக்களவைத் தேர்தலை சுட்டிக் காட்டி அவர் தனது கருத்தை முன்வைத்தார். இதை தலைமை நீதிபதி ஏற்கவில்லை.
இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்வோம் என்று காங்கிரஸ் மிரட்டல் விடுத்தது. இந்த அச்சுறுத்தலை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் நீதித் துறையையே மிரட்டுகின்றனர்.
ஜனநாயகத்தின் கோயில் உச்ச நீதிமன்றம். அந்த கோயிலுக்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்க மாட்டேன். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அச்சமின்றி நீதியின் பாதையில் நடக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.