

காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆனந்த்நாக் மாவட்டம், பிஜிப்பேராவில் உள்ள சிகிபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவத்தினர், போலீஸாருடன் இணைந்து இன்று காலையில் திடீரென சோதனை நடத்தினர்.
அப்போது, ராணுவத்தினரைப் பார்த்ததும், தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். ராணுவத்தினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதனால், இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச் சண்டையில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுங்களை ராணுவத்தினர் கைப்பற்றினர். தொடர்ந்து அந்தப் பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆனந்த்நாக் மாவட்டம் முழுமையும், செல்போன் செயல்பாடு முடக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த 3 நாட்களுக்கு முன், சோபியான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர், ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.