

ஆந்திர மாநிலத்தில் மக்கள் பாதுகாப்புக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது, மக்களுக்கு தீங்கு இழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
ஆந்திர சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கடந்த 2 நாட்களாக எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறது.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது, தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸை சேர்ந்த 14 தொண்டர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என அந்தக் கட்சி அவையில் பிரச்சினை எழுப்பியது.
இந்த விவகாரத்தால் சட்ட மன்றத்தில் சனிக்கிழமையும் கடும் அமளி ஏற்பட்டது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் சட்டமன்றம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
மக்கள் பாதுகாப்புக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. மக்களுக்கு எதிரான சக்திகளை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதில் கட்சி, ஜாதி, மத வேறுபாடின்றி அரசு நடவடிக் கைகளை மேற்கொள்ளும் என்பதில் சந்தேகம் வேண்டாம். எதிர்க்கட்சி தேவையில்லாமல் அரசு மீது களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் குற்றம் சாட்டி வருகிறது. மாநிலத்தில் மணல் மாபியா, சுரங்க மாபியா, செம்மர மாபியா, ரியல் எஸ்டேட் மாபியா போன்றவை தலை தூக்கி உள்ளன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.