Published : 12 Nov 2018 01:27 PM
Last Updated : 12 Nov 2018 01:27 PM

அமித் ‘ஷா’ என்பது பாரசீக பெயர்: உங்கள் பெயரை மாற்றுங்கள் - பாஜக தலைவரை மடக்கிய வரலாற்றாசிரியர்

முகலாய மன்னர்கள் சூட்டிய நகரங்களின் பெயர்களை மாற்றி வரும் பாஜகவினர் முதலில் தங்கள் பெயரை இந்திய பெயர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும் என வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் கூறியுள்ளார். அமித் ஷாவின் பெயர் முஸ்லிம் வேர்களை கொண்ட பாரசீக பெயர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரான அலகாபாத்தின் பெயரை மாற்றி, பிரயாக்ராஜ் என்று அம்மாநில பாஜக அரசு புதிய பெயர் சூட்டியுள்ளது. அதுபோலவே அயோத்தி நகரம் அமைந்துள்ள பைஸாபாத் மாவட்டத்தின் பெயரை ‘அயோத்தி’ என்று மாற்றி யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் பெயரை கர்னாவதி என மாற்றுவது குறித்ஐ பரிசீலித்து வருவதாக அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி அறிவித்தார். தெலங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத் நகரின் பெயரை ‘பாக்யநகர்’ என மாற்றப்போவதாக அக்கட்சி எம்எல்ஏ ராஜா சிங் அறிவித்துள்ளார்.

முசாபர்நகரின் பெயரை ‘லட்சுமி நகர்’என மாற்ற வேண்டும் எனவும், ஆக்ரா நகரின் பெயரை ‘அகரவால் அல்லது அகரவன்’ என மாற்ற வேண்டும் எனவும் பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

பாஜகவின் பெயர் மாற்றும் நடவடிக்கைக்கு அதன் கூட்டணிக் கட்சிகளே கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முகலாய மன்னர்கள் காலத்தில் வைக்கப்பட்ட நகரத்தின் பெயர்களை மாற்றும் முன், பாஜக தனது கட்சியில் உள்ள முஸ்லிம் தலைவர்களின் பெயரை மாற்ற வேண்டும் என்று உத்தரப் பிரதேச மாநில அமைச்சரும், சுகதேவ் பாரதிய சமாஜ் கட்சி தலைவருமான ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறினார்.

இதுபோலவே பிரபல வரலாற்றாசிரியரான இர்பான் ஹபீப், பாஜக பெயர் மாற்றும் செயலை வன்மையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘‘ஷா’ என்பது பாரசீக பெயர். நமது நாட்டு பெயரே அல்ல. அது சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது அல்ல.

பாரசீக மொழியைச் சேர்ந்தது. ‘ஷா’ என்பதன் பொருள் மன்னர் என்பதாகும், முகாலாய மன்னர்களான பகதூர் ஷா, ஷா ஆலம், ஷாஜகான் என பல முகலாய மன்னர்களும் இந்த பெயரை சூடியுள்ளனர். பாரசீக மொழியில் இருந்து இந்த பெயர் மெகலாய மன்னர்களுக்கு வந்துள்ளது. இவை அனைத்தும் முஸ்லிம் வேர்களை கொண்டது.

பாஜக தலைவர் அமித் ஷாவின் பெயருக்கு பின்னால் உள்ள ‘ஷா’ என்பதை அவர் முதலில் மாற்ற வேண்டும். பாரசீக பெயர் வைத்துக் கொள்ளும் பாஜகவினர் நகரங்களின் பெயர்களை மாற்றுவது ஏன். பாஜக தலைவர்கள் முதலில் தங்கள் பெயர்களை முழுமையான இந்திய பெயர்களாக சூடிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு நகரங்களின் பெயர்களை மாற்றலாம்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x