

தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா மேகதாது அணை கட்ட முடியாது என காவிரி மேலாண்மை வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடக மாநிலம் மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
இதன்மூலம் மேகதாது அணை கட்டுவதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிகளை கர்நாடக அரசு மேற்கொள்ள முடியும். மேகதாது அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்திற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி அளித்ததற்கு தமிழகத்தின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரியில் இனி எந்தஒரு திட்டத்தையும் முன்னெடுத்தால் காவிரி மேலாண்மை வாரியத்தின் இசைவு மிகவும் முக்கியமானதாகும். இந்தநிலையில் மேகதாது அணை தொடர்பாக காவிரி மேலாண்மை வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைவர் மசூத் ஹுசைன் விளக்கம் அளிக்கையில், ‘‘தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு ஒப்புதல் தர வாய்ப்பில்லை. காவிரி ஆற்றின் படுகை பகுதிக்குள் மேகதாது அணை வருவதால் ஆணையத்தின் ஒப்புதல் அவசியம்’’ என கூறியுள்ளார்.