Published : 28 Nov 2018 10:00 AM
Last Updated : 28 Nov 2018 10:00 AM

ஃபிரண்ட்லி மேட்ச் ஆடும் சந்திரசேகர ராவ், ராகுல்: காங்., டிஆர்எஸ் நாணயத்தின் இருபக்கங்கள் - தெலங்கானா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி விமர்சனம்

தெலங்கானா ராஷ்டிர சமிதியும் (டிஆர்எஸ்) காங்கிரஸும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை என பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமர்சனம் செய்துள்ளார்.

தெலங்கானா சட்டப்பேர வைக்கு வரும் டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நிஜாமாபாத் மற்றும் மகபூப் நகர் ஆகிய இடங்களில் பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாக்கு சேகரித்தார். நிஜாமாபாத்தில் தனது பேச்சை தெலுங்கில் தொடங்கிய அவர் தொடர்ந்து பேசியதாவது:

முழுமையாக 5 ஆண்டுகள் கூட ஆட்சி நடத்த முடியாதவர் கே. சந்திரசேகர ராவ். இவர் தன் மீது நம்பிக்கை வைத்ததை விட, அடிக்கடி பூஜைகள் செய்து, எலுமிச்சை, மிளகாய் மீதே அதிகம் நம்பிக்கை வைத்துள்ளார்.

அனைவருக்கும் குடிநீர் வழங்கிய பின்னரே ஓட்டு கேட்க வருவேன் என கூறிய கே. சந்திர ராவ் , தனது வாக்குறுதிகளை மறந்துவிட்டு இப்போது ஓட்டு கேட்க உங்கள் முன் வருகிறார். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத அவரை வீட்டுக்கு அனுப்புங்கள்.

காங்கிரஸும், டிஆர்எஸ் கட்சியும் தனித்தனி கட்சிகள் கிடையாது. இவர் சோனியா காந்தியிடம் அரசியல் கற்றவர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ராவ் மத்திய அமைச்சராக பணியாற்றி உள்ளார். ஆதலால், இந்த இரு கட்சியினரும் இப்போது உங்கள் முன்னால் ஃபிரண்ட்லி மேட்ச் ஆடுகின்றனர். இவர்களை நம்பாதீர்கள். காங்கிரஸும், டிஆர் எஸ் கட்சியும் குடும்ப அரசியல் நடத்தும் கட்சிகள். ஆனால், இதை சோனியா காந்தி விமர்சிப்பதுதான் இந்த ஆண்டின் மிகச் சிறந்த ஜோக்.

தான் ஆட்சிக்கு வந்த உடன் நிஜாமாபாத்தை லண்டன் போல உருவாக்கிக் காட்டுவேன் என சந்திரசேகர ராவ் கூறியிருந்தார். ஆனால் இப்போது நிஜாமாபாத்துக்கு ஹெலிகாப்டரில் வரும்போது பார்த்தேன். எந்தவொரு வளர்ச்சிப் பணிகளும் நடைபெறாமல் காட்சியளிக்கிறது. இவ்வாறு பேசினார்.

பின்னர் மகபூப் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “தெலங்கானா மாநிலம் உருவாக பலர் தியாகம் செய்துள்ளனர். ஆனால் தன்னால் மட்டுமே தெலங்கானா உருவானதாக சந்திரசேகர ராவ் கூறிக் கொள்கிறார். இதேபோலத் தான் சுதந்திரம் வந்தது முதல் காங்கிரஸும் தனது கட்சியை நடத்தி வருகிறது. சாதி, மதம் என இவர்கள் இந்த நாட்டைப் பிரித்து ஆண்டு வந்துள்ளனர். ஆந்திராவை அநியாயமாக பிரித்தது காங்கிரஸ்.

வரும் 2020-ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே பாஜகவின் லட்சியம். ஆனால், ராகுல் காந்தி விவசாயிகள் குறித்து பல மேடைகளில் முதலை கண்ணீர் விடுகிறார்.

முதலில் இதை அவர் நிறுத்த வேண்டும். டிஆர்எஸ் கட்சியும், காங்கிரஸும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள். இவர்களால் எந்த மாற்றமும் கொண்டு வர முடியாது. ஒருமுறை தெலங்கானாவில் பாஜக ஆட்சி மலர ஆதரவு கொடுங்கள்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x