Published : 05 Nov 2018 12:40 PM
Last Updated : 05 Nov 2018 12:40 PM

தீபாவளிக்கு முன்பே டெல்லியை உலுக்கும் காற்று மாசு: புகை மூட்டத்தால் சுவாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு

டெல்லியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கும் முன்பாகவே இன்று காலை மிகமோசமான காற்று மாசு திரண்டு புகை மூட்டமாக மாறியதால் மக்கள் சுவாசிக்க முடியாமல் திணறினர்.

டெல்லியில் காற்று மாசுபாடு அபாய அளவுக்குச் சென்றதால் கடந்த ஆண்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அவசர நிலையின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. காற்றின் தரக்குறியீடு அபாயகர அளவில், காற்றில் பிஎம்2.5 துகள்களின் சராசரி அளவு 397 யூனிட் ஆக இருந்தது. இது பாதுகாப்பான அளவைவிட 18 மடங்கு அதிகம்.

இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைவிடப்பட்டது. தொழிற்சாலைகள் இயங்கவும், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகை நாளை நடைபெறவுள்ள நிலையில் பட்டாசு வெடிப்பதால் டெல்லியில் காற்று மாசு அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுடன், பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி போலீஸார் விதித்துள்ளனர். பசுமை பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கும் முன்பாகவே டெல்லியில் இன்று காலை காற்று மாசு அளவு மிக மோசமான நிலைக்கு சென்றது. காற்றின் தரக்குறியீடு ‘மிக மோசம்’என்ற அளவில், பிஎம்2.5 துகள்களின் சராசரி அளவு 345 யூனிட் ஆக இருந்தது. இது பாதுகாப்பான அளவைவிட 14 மடங்கு அதிகம்.

அதிகாலை நேரத்தில் அடர்ந்து பனியைப்போல காற்று மாசு மூடியதால் நடை பயிற்சிக்கு சென்றவர்கள் மூச்சுவிட முடியாமல் திணறினர். வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. இதையடுத்து காற்று மாசு அளவை குறைக்க உடனடி நடவடிக்கைகளை டெல்லி அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x