Published : 03 Nov 2018 03:57 PM
Last Updated : 03 Nov 2018 03:57 PM

13 பேரை வேட்டையாடிய ஆட்கொல்லி பெண் புலி ஆவ்னி: சுட்டுக்கொன்றது வனத்துறை; குட்டிகள் எங்கே?

அடர்ந்த வனப்பகுதியில் வாழும் புலி எப்போதாவது கிராமத்துக்குள் வந்து ஆடு, கோழி, மாடு போன்றவற்றை அடித்துக் கொல்வது வழக்கம். இதுபோன்ற புலி சில சமயங்களில் மனிதர்களை கொல்வது அரிதான சம்பவம். அவ்வாறு மனிதர்களை புலி கொன்று விட்டால் தொடர்ந்து அது மனித வேட்டையாடுவதை வாடிக்கையாக வைத்துவிடும்.

எனவே மனித உடலை ருசித்த புலிகளை உடனடியாக கொன்று விடுவதை வனத்துறை வழக்கமாக கொண்டுள்ளனர். உத்தரகண்ட் தொடங்கி தமிழகம் வரை ‘மேன் ஈட்டர்’ எனப்படும் ஆட்கொல்லி புலிகள் வேட்டையாடப்பட்டுள்ளன. தமிழக - கர்நாடக எல்லை பகுதியிலும் முன்பு ஆட்கொல்லி புலிகள் கொல்லப்பட்டுள்ளன.

இந்தநிலையில், மகாராஷ்டிரா மாநிலம் யவாடாமால் மாவட்டத்தில் உள்ள பந்தர்காவாடா வனப்பகுதியில் பெண் புலி ஒன்று ஆட்கொல்லியாக மாறியுள்ளது. ஆவ்னி என பெயரிடப்பட்ட இந்த பெண் புலி 13 பேரை வேட்டையாடியுள்ளது. இதனால் கிராமப்புறங்களில் அச்சம் நிலவியது. 13 மனிதர்களை கொன்று அவர்கள் உடலை ருசித்த இந்த புலியை கொல்ல வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து ஆவ்னி புலியை கொல்ல வனத்துறை முடிவு செய்தது. அந்த புலிக்கு இரண்டு குட்டிகளும் உள்ளன. தாய் புலி ஆட்கொல்லியாக மாறியதால் மனித மாமிசத்தை தனது குட்டிகளுக்கும் கொடுத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தாயையும், மூன்று குட்டிகளையும் கொல்ல வனத்துறை முடிவு செய்தது. ஆனால் இதற்கு உயிரின ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

#SaveAvni #LetAvniLive என்ற ஹாஷ்டாக்குகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் சமூகவலைதளங்களில் நடந்தன. அந்த புலியை கொல்ல வேண்டும் என வனப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்தினர். புலிக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் ஆவ்னி புலியை கொல்லக்கூடாது எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் உச்ச நீதிமன்றம் புலியை உயிருடன் பிடிக்க உத்தரவிட்டது.

ஆவ்னி புலியை தேடி 3 மாதங்களாக ட்ரோன் மற்றும் நவீன கருவிகளுடன் அந்த வனப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு இருந்தனர். புலியை உயிருடன் பிடிக்க முயன்று வருவதாக கூறினர். இந்நிலையில் ஆவ்னி புலி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று நள்ளிரவு அடர்ந்த வனப்பகுதியில் அந்த புலியை சுட்டுக் கொன்றனர். எனினும், இரண்டு குட்டிகள் குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. ஆவ்னி புலி கொல்லப்பட்டது பற்றி வனத்துறையினர் எந்த விரிவான தகவலை வெளியிட வில்லை. இந்த தகவல் வெளியானதும் வனப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x