இந்தியா - பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் வழித்தடம்: சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் வழித்தடம்: சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு
Updated on
1 min read

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கர்தார்பூர் வழித்தடம் அமைக்கும் திட்டத்துக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சீக்கியர்களின் குருவான குருநானக், பாகிஸ்தானின் நரோவால் மாவட்டத்தில் உள்ள கர்தார்பூரில் 18 ஆண்டுகள் இருந்துள்ளார். இந்த பகுதியில், தர்பார் சாஹிப் குருத்வாரா அமைந்துள்ளது. இந்த குருத்வாராவுக்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதுபோலவே, இந்தியாவின் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா குருத்வாராவுக்கு பாகிஸ்தானில் இருந்து சீக்கியர்கள் வருகை தருகின்றனர். எனவே குருதாஸ்பூர் மற்றும் கர்தார்பூரை இணைக்கும் வகையில் வழித்தடம் அமைக்க மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.

குருதாஸ்பூர் மாவட்டத்தில் இருந்து சர்வதேச எல்லை வரை இந்தியா சார்பில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. மறுபக்கம், பாகிஸ்தான் பகுதியில் கர்தார்பூரில் இருந்து சர்வதேச எல்லை வரை வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

ஆனால் இந்த திட்டத்துக்கு பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘கர்தார்பூர் வழித்தடம் அமைக்கும் திட்டம் மிகவும் ஆபத்தானது. இதனை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்தும். சோதனை செய்வதற்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

வெறும் பாஸ்போர்ட்டை மட்டும் காட்டிவிட்டு இந்தியாவுக்குள் வர அனுமதிப்பதை ஏற்க முடியாது. 250 ரூபாய் கொடுத்தால் டெல்லி சாந்தினி சவுக்கில் கூட தற்போது பாஸ்போர்ட் கிடைக்கும். ஆன்மீக பயணம் வந்தாலும் கூட அவர்கள் 6 மாதத்துக்கு முன்பே பதிவு செய்து அவர்களது விவரங்கள் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும்’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in