இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்களே: ஆர்.எஸ்.எஸ்

இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்களே: ஆர்.எஸ்.எஸ்
Updated on
1 min read

இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்களே என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

இந்துத்துவா ஒரு வாழ்க்கை முறை, இந்துக்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம், எந்தக் கடவுளை வழிபடுபவராகவும் இருக்கலாம், அல்லது கடவுள் வழிபாடு செய்யாதவர்களாகக் கூட இருக்கலாம், ஆனால் இவர்கள் அனைவரும் இந்துக்களே என்று கூறியுள்ளார்.

"இங்கிலாந்தில் வாழ்பவர்கள் ஆங்கிலேயர்கள் என்றால், ஜெர்மனியில் உள்ளவர்கள் ஜெர்மானியர்கள் என்றால், யு.எஸ்.ஏ.-வில் வசிப்பவர்கள் அமெரிக்கர்கள் என்றால் இந்துஸ்தானில் வசிக்கும் அனைவரும் ஏன் இந்துக்களாக இருக்கக் கூடாது?” என்று கேட்டுள்ளார் மோகன் பகவத்.

கட்டாக்கில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மோகன் பகவத் விவேகானந்தரை மேற்கோள் காட்டி, எந்தக் கடவுளையும் வழிபாடு செய்யாதவர் நாத்திகவாதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் சுயம் என்பதன் மீது நம்பிக்கையில்லாதவர்கள் நிச்சயம் நாத்திகவாதிகளே.

"அனைத்து இந்தியர்களின் பண்பாட்டு அடையாளமும் இந்துத்துவாதான். நாட்டில் தற்போது வாழ்ந்து வருபவர்கள் அனைவரும் இந்த மிகப்பெரிய பண்பாட்டின் சந்ததியினரே”என்று மோகன் பகவத் கூறியதும் சங் பரிவாரைச் சேர்ந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

நிறைய பன்மைத்துவம் இருந்தாலும், இந்துத்துவா மட்டுமே இந்தியாவின் ஒருமையைக் காக்க முடியும் என்பதை உலகம் இப்போது புரிந்து கொண்டு விட்டது என்கிறார் அவர்.

"இந்தியாவில் தர்மம் நிலைத்திருக்கும் வரை உலகம் இந்தியாவை மதிக்கும். ஆனால் தர்மம் அழிந்து விட்டால், நாடு சீரழிவதை உலகின் எந்த சக்தியாலும் காப்பாற்ற முடியாது” என்று கூறினார் மோகன் பகவத்.

சில இந்தியர்கள் இதனை உணர்வதில்லை, எப்போது இந்த விஷயம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டாலும் மதவாத முத்திரை குத்திவிடுகின்றனர். என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in