

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு செய்துள்ள ஒப்பந்தம் குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கில் வாதங்கள் முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.
பிரான்ஸின் டஸால்ட் நிறுவனத்திடம் இருந்து பறக்கும் நிலையில் 36 ரஃபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடிக்கு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தில் விமானத்தின் உதிரிப்பாகங்கள் தயாரிக்க ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்த வழங்கப்பட்டதிலும், காங்கிரஸ் நிர்ணயித்த முந்தைய விலையைக் காட்டிலும் அதிகமான விலையில் ஒப்பந்தம் செய்து ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
ஆதலால், ரஃபேல் விமானங்கள் கொள்முதல் குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முதன்முதலில் வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா, வினித் டண்டா ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி கட்யின் சஞ்சய் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூஷன் ஆகியோர் கூட்டாக மனு செய்திருந்தனர்.
மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.எஸ்.கவுல், கே.எம். ஜோஸப் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரஃபேல் போர்விமானங்கள் விலை குறித்த விவரங்களை சீல்வைக்கப்பட்ட கவரில் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
மனுதாரும் வழக்கறிஞருமாந மனோகர் லால் சர்மா வாதிடுகையில், பிரான்ஸ், மத்திய அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் என்பது சட்டவிரோதமானது என்பதால், இதில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆம்ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் வாதிடுகையில், கடந்த 2015, மார்ச் 25-ம் தேதி 126 ரஃபேல் போர்விமானங்கள் வாங்க காங்கிரஸ் அரசில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதில் 108 விமானங்கள் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் சார்பில் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால்,புதிய ஒப்பந்தத்தில் 36 விமானங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவைக் கூட்டத்தின் ஒப்புதல் பெறாமலேயே பிரதமர் மோடியும்,பிரான்ஸ் அதிபர் ஹோலண்டேயும் கடந்த 2015, ஏப்ரல் மாதம் கூட்டாக எப்படி அறிக்கை வெளியிட்டனர். மத்திய அமைச்சரவையில் 2016, செப்டம்பர் மாதத்தில்தான் ஒப்புதல் பெறப்பட்டது. இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே விமானப்படையில் இருந்து ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி மற்றும் இரு அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகினார்கள். இவர்கள் பிரான்ஸில் இருந்து கொள்முதல் செய்யப்படும் ரஃபேல் விமானக் கொள்முதல் குறித்த விசாரணையில் நீதிமன்றத்துக்கு உதவ அழைக்கப்பட்டனர்.அப்போது நீதிபதிகள் கூறுகையில், இந்த வழக்கின் விசாரணையில் எங்களுக்கு உதவ விமானப்படையில் இருந்து அதிகாரிகளை நியமித்துள்ளோம். எங்களுக்குச் சந்தேகங்களை விமானப்படை அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வோம், பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரியிடம் கேட்க முடியாது என்று தெரிவித்தனர்.
யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி ஆகியோர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கூறுகையில், 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு மிகக் குறுகியகால டெண்டர் விடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது. பாதுகாப்புத் துறை கொள்முதல் விதிமுறைகளில் முக்கியமான 3 நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை. 36 ரஃபேல் போர்விமானங்களை வாங்கும் முடிவை யார் எடுத்தது, எந்த அடிப்படையில் பிரதமர் மோடி இந்த ஒப்பந்தத்தை அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தை அறிவிக்கப் பிரதமர் மோடிக்கு அதிகாரம் இல்லை. 126 ரஃபேல் ஒப்பந்தம் கொள்முதல் செய்யப் போடப்பட்ட ஒப்பந்தம் எப்படி 36ஆகக் குறைந்தது.
ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது, இதுவரை ஒரு ரஃபேல் போர்விமானம் கூடத் தயாரித்து அளிக்கப்படவில்லை. ஒருவேளை 126 ரஃபேல் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் பின்பற்றப்பட்டு இருந்தால், 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் 18 போர் விமானங்கள் இந்தியாவுக்குத் தயாரித்து அளிக்கப்பட்டு இருக்கும்.
ஆனால், மத்திய அரசு தற்போது செய்துள்ள ஒப்பந்தத்தின்படி 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் முதல் விமானம் டெலிவரி செய்யப்படுகிறது. அதன்பின் 2022-ம் ஆண்டுவரை விமானங்கள் அவ்வப்போது தயாரித்து அளிக்கப்படும். ஆதலால், விலை விவரங்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு மத்திய அரசுசார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், ரஃபேல் போர் விமான விலை விவரங்களைப் பொதுப்படையாக அறிவிக்க முடியாது. நாடாளுமன்றத்தில் கூட விலைவிவரத்தை அறிவிக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அதன்பின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோஸப் கூறுகையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து உண்மைகள் வெளிப்படையாகத் தெரிவிக்க அனுமதிக்கப்பட்டால், விலை குறித்து விவாதம் செய்ய முடியும் என்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.