ஜனநாயகம் கண்ணீர் வடிக்கிறது: பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி வேதனை

ஜனநாயகம் கண்ணீர் வடிக்கிறது: பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி வேதனை
Updated on
1 min read

சிபிஐ இயக்குநர்கள் மீதான ஊழல்புகார் வழக்கில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலையீடு தொடர்பாக பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் ஜனநாயகம் கண்ணீர் வடிக்கிறது என்று வேதனைத் தெரிவித்துள்ளார்.

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் அஸ்தானா ஆகியோர் மீதான ஊழல் புகார் வழக்கு நடந்து வருகிறது. இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில், குஜாரத்தைச் சேர்ந்த சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீதான வழக்கின் விசாரணையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய அமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி, மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் கே.வி.சவுத்ரி ஆகியோர் தலையிட்டனர் என்று அஸ்தானா மீதான வழக்கின் விசாரணை அதிகாரியும், சிபிஐ டிஜஜி எம்.கே. சின்ஹா உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்தார். இதுதொடர்பாக பிரமாணப்பத்திரத்தையும் தாக்கல் செய்தார்.

ஆனால், இதுவரை அஜித் தோவல், சவுத்ரி ஆகியோர் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு பதில் ஏதும் அளிக்கவில்லை. ஆனால், மத்திய அமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி சின்ஹாவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, சேற்றைவாரி இறைப்பது போன்றது என்று மறுத்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பிரதமர் மோடியைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

'கிரைம் த்ரில்லர்' கதையின் புதிய பகுதியின் பெயர் 'டெல்லியைத் தாண்டிய காவல்காரர் திருடன்'. இந்த புதிய கதையில் மத்தியஅமைச்சர், தேசியப் பாதுகாப்பு அதிகாரி, சட்டத்துறை செயலாளர், அமைச்சரவைச் செயலாளர் ஆகியோருக்கு எதிராக கவலைகொள்ளக்கூடிய குற்றச்சாட்டுகளை சிபிஐ டிஐஜி எம்.கே.சின்ஹா தெரிவித்துள்ளார். மற்றொருபுறம், குஜராத்தில் இருக்கும் அவரின் கூட்டாளி, கோடிக்கணக்கில் வசூல் செய்வதில் ஆர்வமாக இருக்கிறார். அதிகாரிகள் எல்லாம் சோர்ந்துவிட்டார்கள், நம்பிக்கை உடைந்துவிட்டது. ஜனநாயகம் கண்ணீர் விடுகிறது. இவ்வாறு ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவுகிதார்(காவல்காரர்), சோர்(திருடன்) என்று தொடர்ந்து பிரதமர் மோடியை விமர்சனம் செய்துவருகிறார். இதற்கு பாஜகவும் காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுத்துவருகிறது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in