சரியான போட்டி: ராஜஸ்தான் தேர்தலில் முதல்வர் வசுந்தராவை எதிர்த்து ஜஸ்வந்த் சிங் மகன் போட்டி

சரியான போட்டி: ராஜஸ்தான் தேர்தலில் முதல்வர்
வசுந்தராவை எதிர்த்து ஜஸ்வந்த் சிங் மகன் போட்டி
Updated on
1 min read

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வசுந்தரா ராஜேவை எதிர்த்து பாஜகவின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திர சிங் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

பாஜக சார்பில் கடந்த ஆண்டு போட்டியிட்டு வென்ற மன்வேந்திர சிங், கடந்த செப்டம்பர் மாதம் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் வசுந்தரா தாஸ் போட்டியிடும் ஜலபிரதான் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் டிசம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது. காங்கிரஸ், பாஜக ஆகிய பிரதான கட்சிகள் களத்தில் உள்ளதால் இருமுனைப் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் 2 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி நேற்று 156 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இன்று 2-வது கட்டமாக 32 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதில் மன்வேந்திர சிங் ஜலபிரதான் தொகுதியில் முதல்வர் வசுந்தரா ராஜேவை எதிர்த்துக் களமிறங்குகிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு பார்மர் மாவட்டத்தில் சியோ தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றவர் மன்வேந்திர சிங். ஆனால், பாஜகவின் தனது தந்தை ஜஸ்வந்த் சிங் ஓரம் கட்டப்பட்டதை அறிந்து மன்வேந்திர சிங் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து, பாஜகவில் சேர்ந்தது தவறு என்பதை உணர்ந்துவிட்டதாகக் கூறி அந்தக் கட்சியில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்தச் சூழலில் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு எதிராக ஜலபிரதான் தொகுதியில் மன்வேந்திர சிங் களமிறங்கியுள்ளார்.

காங்கிரஸ் நேற்று வெளியிட்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியிலும், சச்சின் பைலட் டோங்க் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

தனக்கு எதிராக மன்வேந்திர சிங்கை காங்கிரஸ் கட்சி களமிறங்கியுள்ளது குறித்து முதல்வர் வசுந்தரா ராஜே ஜெய்ப்பூரில் நிருபர்களிடம் இன்று கூறுகையில், ''என்னை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் கட்சியால் எந்த வேட்பாளர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால்தான் மன்வேந்திர சிங்கை காங்கிரஸ் எங்கிருந்தோ கொண்டுவந்து என்னை எதிர்த்துப் போட்டியிட வைக்கிறது'' எனத் தெரிவித்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு ஜலபிரதான் தொகுதியில் போட்டியிட்ட வசுந்தரா ராஜே, ஏறக்குறைய அந்தத் தொகுதியில் 63 சதவீத வாக்குகளைப் பெற்றார். 2.28 லட்சம் வாக்குகள் பெற்ற வசுந்தரா, 61 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மீனாட்சி சந்திராவத் 29 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in