

அந்தமானில் அமெரிக்க சுற்றுலாப் பயணியை பழங்குடியின மக்கள் கொன்றனர். இது தொடர்பாக 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஜான் ஆலென் சாவ் (27). இவர் அந்தமான் தீவை சுற்றிப் பார்க்க கடந்த வாரம் வந்துள்ளார்.
அந்தமானில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பற்றி கேள்விப்பட்டு அங்குள்ள வடக்கு சென்டினல் தீவுக்கு உள்ளூர் மீனவர்கள் மூலம் படகில் சென்றுள்ளார்.
வடக்கு சென்டினல் தீவில் சென்டினல் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் வெளியுலகத்துடன் தொடர்பு இல்லாதவர்கள். அந்நியர்கள் வந்தால் அவர்களை இந்த பழங்குடியினர் தாக்குவார்கள். அந்த பகுதிக்கு செல்ல அரசு தடைவிதித்துள்ளது.
இந்நிலையில், தடையை மீறி ரகசியமாக வடக்கு சென்டினல் தீவுக்குச் சென்ற அமெரிக்கர் ஜான் ஆலெனை பழங்குடியின மக்கள் கொன்றனர். இதுதொடர்பாக தகவல் அறிந்த போலீஸார் ஜான் ஆலெனை பழங்குடியின மக்கள் வசிக்கும் தீவுக்கு செல்ல உதவியதாக மீனவர்கள் 7 பேரை கைது செய்து விசாரித்தனர்.
சென்டினல் தீவில் பழங்குடியினரிடம் இருந்து அம்புகள் தாக்கியதாகவும் தாங்கள் பயந்து தப்பி வந்துவிட்டதாகவும் ஜான் ஆலெனை பழங்குடியினர் இழுத்துச் சென்றனர் என்றும் பின்னர் மறுநாள் சென்றபோது அவரது உடலை பார்த்ததாகவும் போலீஸாரிடம் மீனவர்கள் தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட அமெரிக்கர் ஜான் ஆலெனின் உடலை ஹெலிகாப்டர் மூலம் போலீஸார் தேடி வருகின்றனர்.