

தகவல் உரிமை சட்டத் திருத்த மசோதா நகலை பார்வையிட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.
தகவல் உரிமைச் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது. மத்திய, மாநில தகவல் ஆணையர்களின் பதவிக் காலம் மற்றும் சம்பளத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்க இந்த மசோதா வகை செய்கிறது. இது தகவல் ஆணை யர்கள் சுதந்திரமாக செயல்படு வதை பாதிக்கும் என்று விமர்சகர் கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த மசோதா நகலை அளிக்குமாறு, மக்களின் தகவல் உரிமைக்கான தேசிய இயக்கம் (என்சிபிஆர்ஐ) என்ற தன்னார்வ அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் அஞ்சலி பரத்வாஜ், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு, “மசோதா இறுதி செய்யப்படாததால் நகல் அளிக்க இயலாது” என மத்திய அரசு கடந்த மே மாதம் கூறிய பதிலையே மீண்டும் அக்டோபர் 24-ம் தேதி கூறியிருப்பதாக அஞ்சலி பரத்வாஜ் கூறினார்.
11 உறுப்பினர்களை கொண்ட மத்திய தகவல் உரிமை ஆணையத்தில், உறுப்பினர் பதவி காலியிடங்கள் வரும் டிசம்பர் 1-ம் தேதி 8 ஆக உயரவுள்ளது.
இது தொடர்பான வழக்கில், “ஆர்டிஐ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட இருப்பதால் நியமனங்களை நிறுத்தி வைத்துள்ளோம்” என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து.
இந்நிலையில் உறுப்பினர் காலியிடங்களுக்கான விண்ணப்ப தாரர்கள் மற்றும் தேர்வுக் குழு தொடர்பான விவரங்களை அளிக்கவும் மத்திய அரசு மறுத்து விட்டது.
இது தொடர்பாக அஞ்சலி பரத்வாஜ் கூறும்போது, “தகவல் உரிமை ஆணைய நியமனங்களில் வெளிப்படைத்தன்மை முற்றிலும் இல்லை” என்றார்.