

அயோத்தியில் நாளை (நவம்பர் 25) விஷ்வ இந்து பரிஷத்தின்(விஎச்பி) தர்மசபைக்கு போட்டியாக சிவசேனா கூட்டம் நடத்துகிறது. இங்கு இருதினங்கள் தங்கும் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அயோத்திவாசிகளுடன் உரையாடுகிறார். இதனால், மத்திய பாதுகாப்பு படை மற்றும் உபி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்துத்துவா அமைப்பினர் சார்பில் நாளை தர்மசபை கூட்டம் நடைபெறுகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் எதிர்பார்க்கப்படும் கூட்டத்தில் சிவசேனா கலந்துகொள்ளாமல் விலகி நிற்கிறது.
இத்துடன் அதற்கு போட்டியாக சிவசேனா தனியாக ஒரு கூட்டம் நடத்த திட்டமிட்டது. இதில் கலந்துகொள்வதற்காக மும்பையில் இருந்து 3000 சிவசேனாவினர் இருசிறப்பு ரயில்களில் நேற்று அயோத்தி கிளம்பியுள்ளனர்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ இணையததளத்திடம் சிவசேனாவின் உபி மாநில தலைவர் கூறும்போது, ‘‘எங்கள் கூட்டத்திற்கு அயோத்தி நிர்வாகம் மறுத்தால் அதை அயோத்திவாசிகளுடனான சந்திப்பாக மாற்றுவோம். இதற்காக, எங்கள் தலைவர் உத்தவ் தாக்ரே சிறப்பு விமானத்தில் வந்து இருதினங்கள் தங்கி ராமரையும் தரிசிக்கிறார்’’ எனத் தெரிவித்தார்.
இந்த இருகூட்டங்களினால் உபி போலீஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியில் சட்டம் ஒழுங்கை காப்பதுடன் தீவிரவாத தடுப்பு படை மற்றும் மத்திய அரசின் கூடுதல் பாதுகாப்பு படைகளும் அமர்த்தப்பட்டுள்ளன. கூட்டத்தினரை கண்காணிக்க ‘டிரோன்’ எனும் வேவு விமானங்கள் பறக்கவிடப்பட உள்ளன.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பிரச்சனைக்குரிய இடத்தை சுற்றி ஏற்கெனவே நிரந்தர 144 தடை உத்தரவு இருப்பதால் அங்கு எவரும் கூட்டம் சேராதபடி தடை நீடிக்கிறது. இதை உறுதிபடுத்த வேண்டும் என உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தனது காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், விஎச்பியின் தர்மசபையில் பாஜக தலைவர்களுக்கு சாதுக்களுடன் இடம் ஒதுக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பாஜகவிற்கு எந்த சம்மந்தமும் இல்லை என எதிர்கட்சிகளிடம் காட்டுவது அதன் நோக்கம் எனக் கருதப்படுகிறது.
இதே புகாரில் சிக்காமல் இருக்க, தர்மசபையின் பின்னணியில் முக்கிய பங்கு வகிக்கும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் நேரடிப் பங்கு வகிக்கவில்லை
இது குறித்து ‘இந்து தமிழ்’ இணயதளத்திடம் விஎச்பியின் செய்தி தொடர்பாளரான சரத் சர்மா கூறும்போது, ‘இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ராமபக்தர்கள் தர்மசபை கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். இவர்கள் தங்க அயோத்தியில் அனைத்து கோயில்கள் மற்றும் மடங்களில் உணவுடன் இலவசமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
500 பேருந்துகள், 1000 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 20,000 பைக்குகள் நிறுத்தவும் நிர்வாகம் இடம் ஒதுக்கியுள்ளது. எங்கள் கூட்டத்தால் அயோத்தி முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.’ எனத் தெரிவித்தார்.
இதனிடையில், உபியின் பைரியா தொகுதி பாஜக எம்எல்ஏவான சுரேந்திரசிங் 5000 ஆதரவாளர்களுடன் நாளை ராமர் கோயில் பணியை அயோத்தியில் தொடங்குவதாக சர்சைக்குரிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.