மும்பைத் தாக்குதலின்போது ஆட்சியில் இருந்துவிட்டு, துல்லியத் தாக்குதலை கேள்வி கேட்கிறார்கள்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்

மும்பைத் தாக்குதலின்போது ஆட்சியில் இருந்துவிட்டு, துல்லியத் தாக்குதலை கேள்வி கேட்கிறார்கள்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்
Updated on
1 min read

2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது மத்தியிலும், மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்துவிட்டு இப்போது பாகிஸ்தானுக்குள் சென்று நமது ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலை கேள்வி கேட்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாகச் சாடினார் பிரதமர் மோடி.

 அதேசமயம், மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களையும், காரணமானவர்களையும் ஒருபோதும் மறக்கமாட்டோம், தகுந்த நேரத்துக்காகக் காத்திருக்கிறோம், அப்போது, சட்டம் கடமையைச் செய்யும் என்று பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 7-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பில்வாடா நகரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

2008, நவம்பர் 26-ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை ஒருபோதும் இந்தியா மறக்காது, அதற்குக் காரணமானவர்களையும் மறக்காது. நாங்கள் தகுந்த நேரத்துக்காகக் காத்திருக்கிறோம். சட்டம் அதன் கடமையைச் செய்யும். இதைநாட்டுக்கு உறுதியளிக்கிறேன்.

மேடம் ரிமோட்கன்ட்ரோல் ஆட்சி(சோனியாகாந்தி) டெல்லியில் நடந்து கொண்டிருந்த நேரம், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த நேரத்தில் மும்பையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர், நாட்டுக்காக பாதுகாப்புப் படையினர் உயிர்த்தியாகம் செய்தனர்.

மும்பைத் தாக்குதல் குறித்து மற்ற கட்சிகள் கண்டித்தபோது, அதை காங்கிரஸ் கட்சி அரசியலுக்காகப் பயன்படுத்திக்கொண்டது. பாகிஸ்தான் நம்மைத் தாக்கிவிட்டது. ஆனால், மற்ற கட்சிகள் அரசியல் செய்கிறார்கள் என்று குறைகூறியது.

அதுமட்டுமல்லாமல், நமது ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று நடத்திய துல்லியத் தாக்குதலை நாட்டு மக்கள் அனைவரும் புகழ்கிறார்கள், பாராட்டுகிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியோ துல்லியத்தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கிறது, புகைப்படம் கேட்கிறது.

நம்மைச் சீண்டியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நமது எதிரி நாட்டுக்குச் சென்று நமது வீரர்கள் தாக்குதல் நடத்தும்போது, நமது வீரர்கள் துப்பாக்கி எடுத்துச்செல்வார்களா, அல்லது கேமரா எடுத்துச்செல்வார்களா?

மும்பைத் தாக்குதலைப் பார்த்து உலகமே அதிர்ச்சி அடைந்த நிலையில், அந்தத் தாக்குதலை மக்களிடம் கூறி தேர்தலில் அரசியல் செய்ய முயன்றது. அதுபோலத்தான் துல்லியத் தாக்குதலிலும் செயல்படுகிறது. இந்த காங்கிரஸ் கட்சிதான் மக்களுக்குத் தேசபக்தியை கற்றுக்கொடுக்கிறது.

எங்களுடைய 4 ஆண்டுகால ஆட்சியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத சம்பவங்கள், தாக்குதல்கள் குறைந்து இருக்கின்றன.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in