Last Updated : 30 Nov, 2018 06:07 PM

 

Published : 30 Nov 2018 06:07 PM
Last Updated : 30 Nov 2018 06:07 PM

புல்லட் ரயிலுக்காக 30 ஏக்கர் நிலத்தை ரூ. 30 ஆயிரத்துக்கு தர முன்வந்த பெண்மணி

குஜராத்தில்  புல்லட் ரயில் திட்டத்திற்காக தனது மூதாதையரின் குடும்பச் சொத்தை மிகவும் சொற்பத் தொகைக்கு கொடுக்க முன்வந்துள்ளார்  ஜெர்மன் வாழ் இந்தியப் பெண்மணி ஒருவர்.

இதுகுறித்து பிடிஐயிடம் தெரிவித்துள்ள தேசிய உயர்வேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் உயரதிகாரி ஒருவர், ‘‘புல்லட் ரயில் திட்டத்திற்காக நிலம் கையப்படுத்தும் திட்டத்தில் பெறும் முதல் நிலம் இதுவே’’ என்று தெரிவித்தார்.

உயர்வேக ரயில் கார்ப்பரேஷனின் உயரதிகாரி மேலும் தெரிவித்துள்ளதாவது:

''சவீதா பென், ஜெர்மனியில் இந்தியன் ரெஸ்டாரெண்ட் ஒன்றை நடத்திவருபவர். குஜராத்தில் வதோதரா மாவட்டத்தின் பட்ரா தாலுக்காவில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர், 33 ஆண்டுகளுக்கு முன்பே ஜெர்மனியில் குடியேறிய இவர் அங்கு சென்றபின்னர் திருமணம் செய்துகொண்டார்.

குஜராத்தில் புல்லட் ரயில் வருவது கேள்விப்பட்ட சவீதா பென் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். ஆனால் அதற்கான முயற்சிகளில் சில சுணக்கங்கள் உள்ளன என்பதை அறிந்தவர் தனது பூர்வீக நிலத்தை வழங்குவதாக உறுதியளித்தார்.

அதன்படியே, 11.94 ஹெக்டேர் நிலத்தை ரூ.30.094க்கு புல்லட் ரயில் காரிடார் பாதைக்கு வழங்கியுள்ளார். ஒரு ஹெக்டேர் நிலம் 2.47 ஏக்கர் நிலத்திற்கு சமம். அப்படியென்றால் ஏறத்தாழ 29.4918 ஏக்கர் நிலம்.

குஜராத்திற்கு புல்லட் ரயில் வரவேண்டும் என்பதற்காகவே இவ்வளவு ஆர்வத்தோடு இவர் இறங்கி வந்துள்ளார். இவ்வளவு குறைந்தவிலைக்கு நிலத்தை அளிக்க ஒப்புக்கொண்டதற்காக அந்த பெண்மணிக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மாநிலத்தில் இந்த திட்டம் தொடங்குவதற்காக நாங்கள் வாங்கிய முதலாவது பகுதி நிலம் இதுதான்.''

இவ்வாறு இந்திய உயர்வேக ரயில் கார்ப்பரேஷன் உயரதிகாரி தெரிவித்தார்.

பிரதான சாலைப்பகுதிகளில் ஒரு ஏக்கர் நிலம் வாங்க வேண்டுமெனில் 5 கோடி பத்து கோடி இன்றைய மதிப்பு. 1 ஏக்கருக்கு அவ்வளவு மதிப்பு. இப்பெண்மணி கிட்டத்தட்ட தனது 30 ஏக்கர் நிலத்தை புல்லட் ரயில் திட்டத்திற்கு தானாக முன்வந்து கொடுத்துள்ளார்.

1,400 ஹெக்டேர் நிலம் தேவை

புல்லட் ரயில் செல்வதற்காக திட்டமிடப்பட்டுள்ள 508 கிலோமீட்டர் காரிடார் பாதைக்கு குஜராத் மற்றும் மகாராஷ்டிரா இரு மாநிலங்களிலும் 1,400 ஹெக்டேர் நிலங்கள் தேவைப்படுகின்றன. இதில் 1,120 ஹெக்டேர் நிலங்கள் தனியாரிடம் உள்ளன. கிட்டத்தட்ட 6000 நிலச் சொந்தக்காரர்களுக்கு ஈட்டுத்தொகை வழங்கப்பட வேண்டும்.

தற்போது, தேசிய உயர்வேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மும்பையில், இதுவரை 0.09 சதவீத நிலத்தை மட்டுமே கையகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்காக நில கையகப்படுத்துதல் பிரச்சினைகள் தொடர்பாக இரு மாநிலங்களிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

விவசாயிகள் தங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க அவர்களை சமாதானப்படுத்தும் முகாம்கள் தற்போது நிலம் தேவைப்படும் மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x