

மத்திய அரசின் 2 முக்கிய திட்டங்களால் 6 வடமாநிலங்களுக் குட்பட்ட கிராமங்களில் மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு பயன் பாடு அதிகரித்துள்ளதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
சிந்தனை அமைப்பான எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் தண்ணீர் கவுன்சில் சார்பில், சமையல் எரி வாயு பயன்பாடு மற்றும் மின்சார வசதி தொடர்பாக ஒரு ஆய்வு நடைபெற்றது. உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், பிஹார், மேற்குவங்கம் மற்றும் ஒடிஷா ஆகிய 6 மாநிலங்களுக்குட் பட்ட பின்தங்கிய 756 கிராமங் களில் கடந்த 2015 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் 2 கட்டமாக இந்த ஆய்வு நடைபெற்றது. சுமார் 9 ஆயிரம் குடும்பத்தினரிடம் நடத்திய இந்த ஆய்வின் விவரம் வருமாறு:
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 6 மாநிலங்களைச் சேர்ந்த கிராமங் களில் மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு பயன்பாடு 2015-ம் ஆண்டில் இருந்ததைவிட 2018-ல் கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கு மத்திய அரசு செயல் படுத்திவரும் சவுபாக்யா (அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு) மற்றும் உஜ்வாலா (கிராமப்புற மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு) ஆகிய 2 திட்டங்கள்தான் முக்கிய காரணம். குறிப்பாக, அக்டோபர் 2018 வரையில் இந்த கிராமங்களைச் சேர்ந்த 84 சதவீத வீடுகளுக்கு மின் இணைப்பும் 58 சதவீத வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் 95 சதவீத வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக் கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதிலும், ஒழுங்கற்ற மின் விநியோகம் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் கடுமையான விலை உயர்வு ஆகியவை கிராமப்புற மக்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாகவே நீடிக்கிறது. இதுபோல இந்த கிராமங்களில் இரவில் வெளிச்சத்துக்காக மண் ணெண்ணெய் விளக்கு பயன்பாடு 2015-ல் 50 சதவீதமாக இருந்தது. மின்வசதி காரணமாக இது இப்போது 20 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்கள் அதைப் பயன் படுத்துவது குறைவாகவே உள் ளது. குறிப்பாக, 37 சதவீத குடும்பத்தினர் சமையல் எரிவாயு சிலிண்டரை முதன்மை எரி பொருளாக பயன்படுத்துகின்றனர். அதாவது இவர்கள் மாற்று எரிபொருளையும் பயன்படுத்து கின்றனர். 19 சதவீதம் பேர் மட்டுமே சமையல் எரிவாயு சிலிண்டரை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இது 2015-ல் முறையே 14 மற்றும் 5 சதவீதமாக இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.