Published : 17 Nov 2018 03:26 PM
Last Updated : 17 Nov 2018 03:26 PM

ம.பி.தேர்தல்: பாஜக சார்பில் ஒரே ஒரு முஸ்லிம் பெண் வேட்பாளர் போட்டி

மத்தியப் பிரேதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் ஒரே ஒரு முஸ்லிம் பெண் வேட்பாளராக பாத்திமா ரசூல் சித்திக் போட்டியிடுகிறார்.

பாத்திமாவின் தந்தை ரசூல் சித்திக் முன்னாள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் என்பதால், பாத்திமாவை காங்கிரஸ் கட்சிக்குப் போட்டியாக களத்தில் இறங்கியுள்ளது பாஜக.

கடந்த 1980 மற்றும் 1990 களில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசில் இருமுறை அமைச்சராக இருந்தவர் ரசூல் சித்திக். காங்கிரஸ் தலைவர் மாதராவ் சிந்தியாவுக்கு மிகவும் நெருங்கியவராக ரசூல் சித்திக் இருந்தார். ஆனால், ரசூல் சித்திக்கை கட்சியில் ஓரம் கட்டிவிட்டு, அரீப் அக்குயில் என்பவர் வந்தார். அவரைத் தோற்கடிக்கும் வகையில் தற்போது பாத்திமா களமிறங்கியுள்ளார்.

இதுகுறித்து பாத்திமா ரசூல் சித்திக் கூறியதாவது:

''என்னுடைய தந்தையின் இறப்புக்குப் பின் காங்கிரஸ் கட்சி எங்களுக்கு அந்நியப்பட்டுவிட்டது. எங்கள் குடும்பம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான குடும்பம், ஆனால், பாஜகவில் சேர முடிவு செய்தபோது அனைவரும் வியப்பாகப் பார்த்தனர். கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவை அணுகிய போது, எனக்கென சில கோரிக்கைகள் இருந்தன. ஆதலால், அதைவிட்டு வெளியே வந்து என்னால் போட்டியிட முடியவில்லை.

ஆனால், இந்த முறை எனக்கு பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் சிவராஜ் சவுகான் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார். என்னுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த முதல்வர் சிவராஜ் சவுகான், என்னுடைய வேட்பு மனுத்தாக்கலின் போது உடன் இருந்தார்.

காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு பாஜக சார்பில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால், பாஜகவில் நான் ஏன் இணைந்தேன் என்பது குறித்து யாரும் என்னிடம் கேள்வி கேட்கவில்லை. நான் தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்லும் போது, மக்கள் என் தந்தை செய்த செயல்கள், நல்ல காரியங்கள், நலத்திட்டங்கள், மருத்துவமனை கட்டிக்கொடுத்தது ஆகியவற்றைக் கூறி பாராட்டுகிறார்கள். என் தந்தையைக் கட்சியில் இருந்து ஓரம் கட்டி, வீழ்த்திய அரீப் அக்குயிலை எதிர்த்துப் போட்டியிடுகிறேன்''.

இவ்வாறு பாத்திமா தெரிவித்தார்.

முத்தலாக் குறித்து பாத்திமாவிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், ''விவாகரத்து குறித்து இஸ்லாத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. முத்தலாக் என்பது கடைசி வாய்ப்பு தான், குடும்பத்தைப் பராமரிப்பதுதான் முதன்மையானதாகும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x