

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் காலநிலைக்கும், பருவநிலைக்கும் அர்த்தம் புரியாமல் பதிவிட்ட கருத்துக்கு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவி கிண்டல் செய்து ரீட்வீட் செய்துள்ளது வைரலாகி வருகிறது.
வாஷிங்டனில் கடந்த 21-ம் தேதி வெப்பம் மைனஸ் 2 டிகிரி செல்சியஸாகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த 22-ம் தேதி புவி வெப்பமயமாதல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். அதில் “ கொடூரம், அதிகபட்சமான பனியும், குளிரும் அனைத்துச் சாதனைகளையும் முறியடிக்கப் போகிறது. புவி வெப்பமயமாதலால் (குளோபல் வார்மிங்) என்னென்ன நடந்திருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த ட்வீட்டுக்கு பதில் அளித்து, அசாம் மாநிலம் ஜோர்ஹாத் பகுதியைச் சேர்ந்த அஸ்தா சர்மா என்ற மாணவி கிண்டல் செய்து ரிட்வீட் செய்துள்ளது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.
அவர் பதிவிட்டுள்ளதில், “ நான் உங்களைக் காட்டிலும் 54 வயது சிறியவள். பள்ளிப்படிப்பைச் சராசரி மதிப்பெண்கள் வாங்கித்தான் முடித்திருக்கிறேன். ஆனால், என்னால்கூட, வானிலை (WEATHER) மற்றும் காலநிலை (CLIMATE) ஆகிய இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கூற முடியும்.
உங்களுக்குப் புரிந்து கொள்வதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், நான் 2-ம் வகுப்பு படிக்கும் போது வாங்கிய என்னுடைய என்சைக்ளோபீடியாவை அனுப்பி வைக்கிறேன். அந்தப் புத்தகத்தில் படங்களும், விளக்கங்களும் இருக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
மாணவி அஸ்தா சர்மாவின் ட்வீட்டுக்கு உலக அளவில் இதுவரை 22 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த ஏராளமானோர், மாணவியின் விளக்கத்தையும், பதிலையும் பாராட்டியுள்ளனர்.
5 ஆயிரம் பேர் மாணவியின் ட்வீட்டுக்கு ரீட்வீட் செய்து எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிலர் பருவநிலை குறித்துப் படிப்புகளுக்கு உதவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலும் பலருக்கும் காலநிலை (climate) மற்றும் வானிலை (Weather) குறித்த விளக்கங்கள் குழப்பமாக இருக்கும். காலநிலை அல்லது தட்பவெப்பநிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நீண்ட கால அடிப்படையிலான தட்பவெப்பம், மழை, குளிர், ஈரப்பதம் ஆகியவற்றைக் குறிப்பதாகும். வானிலை என்பது வளிமண்டலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படும் மாறுதல்களைக் குறிக்கும்.