Last Updated : 07 Nov, 2018 05:01 PM

 

Published : 07 Nov 2018 05:01 PM
Last Updated : 07 Nov 2018 05:01 PM

பண மதிப்பிழப்பு 2-ம் ஆண்டு: செல்லாத ரூபாய் நோட்டுகளை அழிக்க எவ்வளவு செலவு?- ரிசர்வ் வங்கி மறுப்பு

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது வங்கிக்குத் திரும்பி வந்த செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அழிப்பதற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்று ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளிக்க ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது

நாட்டில் கறுப்புப் பணம், கள்ள நோட்டு, ஊழலை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நாட்டில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி கொண்டு வந்தார். இதன் மூலம் நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.15 லட்சம் கோடிக்கு அதிகமான ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, திரும்பப் பெறப்பட்டன. அதற்குப் பதிலாக புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டு நாளையுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதுவரை வங்கிக்கு ரூ.15.31 லட்சம் கோடி பணம் வந்துவிட்டதாகவும், அதாவது ஏறக்குறை. 99 சதவீதம் ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துவிட்டதாகவும், ரூ.10,720 கோடி மட்டுமே திரும்பி வரவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இந்த செல்லாத ரூபாய் நோட்டுகளாக ரூ.15.31 லட்சம் கோடி முழுவதும் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு அழிக்கப்பட்டு விட்டன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த செல்லாத நோட்டுகளை அழிப்பதற்கு ரிசர்வ் வங்கி எவ்வளவு செலவு செய்துள்ளது என்பதை அறிய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுட் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதற்குப் பதில் அளித்த ரிசர்வ் வங்கியின் கரன்சி மேலாண்மைப் பிரிவு, ரிசர்வ் வங்கிக்கு இன்னும் ரூ.10,720 கோடி மட்டும் திரும்பி வரவில்லை. செல்லாத நோட்டுகள் என அறிவிக்கப்பட்ட ரூ.15.31 லட்சம் கோடி நோட்டுகள் அனைத்தும் தீவிர ஆய்வுக்குப் பின், கடந்த மார்ச் மாதம் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால், இந்த கரன்சிகளை அழிப்பதற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்ற விவரங்களைத் தெரிவிக்க இயலாது. ரிசர்வ் வங்கி சட்டம் பிரிவு7-(9)ன்படி, இந்த தகவலைத் தெரிவிக்க இயலாது எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x