மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள்: ஆர்டிஐ மனுவுக்குப் பதில் அளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு

மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள்: ஆர்டிஐ மனுவுக்குப் பதில் அளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு
Updated on
1 min read

மத்திய அமைச்சர்கள் மீது பெறப்பட்ட ஊழல் புகார்கள் குறித்த விவரங்களைக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கப் பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது.

ஐஎப்எஸ் அதிகாரியான சஞ்சீவ் சதுர்வேதி என்பவர் எம்ய்ஸ் மருத்துவமனையில் நடந்த பல்வேறு ஊழல் வழக்குகளை ஊழல் கண்காணிப்பு அதிகாரியாக இருந்தபோது வெளிக்கொணர்ந்தவர். கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தில் பணியாற்றியவர். இவர் மத்திய அமைச்சர்கள் மீது பெறப்பட்ட ஊழல் புகார்கள் குறித்த விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்திடம் கேட்டிருந்தார்.

ஆனால், பிரதமர் அலுவலகம் அந்தத் தகவலை அளிக்க மறுத்து பதில் அனுப்பியது.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

''பல்வேறு துறைகளின் மத்திய அமைச்சர்களுக்கு எதிராகவும், உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும் ஏராளமான புகார்கள் பிரதமர் அலுவலகத்துக்கு வருகின்றன. ஆனால், இந்தப் புகார்கள் எல்லாம் முகவரி இல்லாத, ஆதாரமில்லாத புகார்களாகும். இந்தப் புகார்கள் அனைத்தும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, குற்றச்சாட்டுக்களின் தன்மையைப் பார்த்தும், அதற்குரிய ஆதாரங்களின் அடிப்படையில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அந்தப் புகார்கள் மீது தேவையான அளவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தப் புகார் குறித்த நகல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தேக்கிவைக்கப்படவில்லை. மாறாக, பரவலாக பல்வேறு துறை அலுவலகங்களில் பரந்து கிடக்கின்றன.

மேலும், இந்தப் புகார் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது தனிப்பட்ட ரீதியிலும் ஊழல் சார்ந்தும் வருகின்றன. ஆனால், மனுதாரர் தனது மனுவில் அமைச்சர்கள் மீதான ஊழல் தொடர்பான புகார்கள் குறித்த விவரங்கள் மட்டுமே கேட்டுள்ளார்.

ஒவ்வொரு புகாரையும் கண்டுபிடித்து, ஆய்வு செய்து ஊழல் குறித்த புகார்களாக பிரித்தெடுப்பது என்பது தனிப்பட்ட நபர் சார்ந்ததாக அமையும், சிக்கலான பணியாக இருக்கும். பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்து, தீவிர தேடுதலுக்குப் பின்புதான் இந்தத் தகவல்களைச் சேகரிக்க முடியும்.

இதுபோன்ற பணிகள் அரசு அலுவலகத்தின் வழக்கமான பணிகளில் இருந்து திசைமாற்றிவிடும் என்பதால், வழங்க இயலாது''.

இவ்வாறு பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

சமீபத்தில் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஸ் அஸ்தானாவுக்கு உதவியதாக மத்திய அமைச்சர் சவுத்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய ஊழல் தடுப்பு ஆணையர் கே.வி.சவுத்ரி ஆகியோர் மீது சிபிஐ அதிகாரி மணிஷ் குமார் சின்ஹா, ஊழல் புகார் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in