

ஏர் இந்திய விமானத்தில் பயணம் செய்த ஐரிஷ் நாட்டு பெண் ஒருவர் குடிபோதையில் கூடுதல் மது கேட்டு, விமான ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார். ஊழியர்கள் மீது எச்சில் துப்பி தகாத வார்த்தைகளால் திட்டிய அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பையில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று சனிக்கிழமை சென்றுள்ளது. இந்த விமானத்தில் ஐரிஷ் நாட்டு பெண் ஒருவரும் பயணம் செய்துள்ளார். பயணத்தின்போது அதிகஅளவு மதுபானத்தை கேட்டுக் குடித்துள்ளார். இரண்டு ‘குவாட்டர்’ அளவுக்கு மதுபானத்தை விமான பணிப்பெண்கள் வழங்கியுள்ளனர். ஆனால் அதன் பிறகும் தொடர்ந்து கூடுதலாக ஒயின் வழங்க வேண்டும் என அவர் வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் அளவுக்கு அதிகமாக குடிபோதையில் இருந்த அந்த பெண்ணுக்கு மதுபானம் வழங்க விமான ஊழியர்கள் மறுத்து விட்டனர். இதையடுத்து விமான ஆண் ஊழியர் ஒருவரிடம் அந்த பெண் தகாரறில் ஈடுபட்டார்.
அவரது இடத்துக்கே சென்ற அவர் உடனடியாக தனக்கு மதுபானம் தர வேண்டும் என நிர்பந்தித்தார். மேலும், சர்வதேச அளவில் மனித உரிமை ஆர்வலர்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் தாம் என்றும், தம்மை மதிக்காவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் எனவும் கூறி விமான ஊழியரை கடுமையா வார்த்தைகளால் திட்டிள்ளார்.
ஒரு கட்டத்தில் அவரது நடவடிக்கைகள் எல்லை மீறியது. பைலட் இருக்கும் பகுதிக்கு சென்ற அவர் அங்கு விமான ஊழியர் மீது எச்சிலை உமிழ்ந்து, இன ரீதியாகவும் அசங்கமான வார்த்தைகளை சொல்லி அவர் திட்டியுள்ளார்.
அவரது செயலால் சக பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். இதனை பயணிகள் சிலர் மொபைல் போனில் படம் எடுத்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலை தளங்களில் பரவி தற்போது வைரலாகி வருகிறது. பலரும் அந்த பெண்ணுக்கு சமூகவலைதளங்களில் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
லண்டன் விமான நிலையத்தை சென்றடைந்தவுடன் அந்த போதைப் பெண்ணை அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர். சர்வதேச விமான பயணிகள் நடவடிக்கை சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.