

முன்னாள் மத்திய அமைச்சர் அம்பரீஷின் உடல் முழு அரசு மரியாதையுடன் பெங்களூருவில் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கன்னட மூத்த நடிகரும், முன் னாள் மத்திய மாநில அமைச்ச ருமான அம்பரீஷ் (66) கடந்த சனிக்கிழமை இரவு மாரடைப்பால் காலமானார். ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா, முதல்வர் குமாரசாமி, நடிகர் ரஜினிகாந்த் உட்பட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அன்றிரவு அம்பரீஷின் உடல் அவரது சொந்த ஊரான மண்டியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள விஸ்வேஸ்வரய்யா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, அமைச்சர்கள் டி.கே.சிவகுமார், பிரியங்க் கார்கே உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதே போல அம்பரீஷின் லட்சக்கணக்கான ரசிகர்களும், ஆதரவாளர்களும் விடிய விடிய வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
அங்கிருந்து அம்பரீஷின் உடல் மீண்டும் நேற்று காலை பெங்களூரு கொண்டுவரப்பட்டு கண்டீரவா ஸ்டேடியத்தில் வைக் கப்பட்டது. வெளியூர் படப்பிடிப் பில் இருந்து திரும்பிய நடிகர் கள் சிவராஜ்குமார், தர்ஷன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து பிற்பகல் அம்பரீஷின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அப்போது திரை பிரமுகர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் 'அம்பரீஷூக்கு ஜெய்' என முழக்கம் எழுப்பியவாறு பூக்களை தூவிக்கொண்டு வந்தனர்.
இதனால் பெங்களூருவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 5 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ராஜ்குமார் அருகே அம்பரீஷ்
கண்டீரவா ஸ்டூடியோவில் மாலை 6 மணிக்கு ஊர்வலம் நிறைவடைந்தது. பின்னர் அங்குள்ள மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் சமாதி அருகே அம்பரீஷின் உடல் வைக்கப்பட்டது.
அங்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா, முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் முதல்வர் சித்தராமையா, எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் அம்பரீஷூக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது மனைவி சுமலதாவும், மகன் அபிஷேக்கும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் முழு அரசு மரியாதையுடன், துப்பாக்கி குண்டுகள் முழங்க அம்பரீஷின் சிதைக்கு அவரது மகன் அபிஷேக் தீ வைத்தார்.
இறுதியில் அம்பரீஷின் இறுதிச் சடங்கில் அமைதியான முறையில் பங்கேற்ற லட்சக் கணக்கான தொண்டர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும், திரையுலகினருக்கும் முதல்வர் குமாரசாமி நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தார்.