Last Updated : 24 Nov, 2018 04:34 PM

 

Published : 24 Nov 2018 04:34 PM
Last Updated : 24 Nov 2018 04:34 PM

144 தடை உத்தரவு: அயோத்தி சென்றார் உத்தவ் தாக்ரே; நாளை விஎச்பியின் ‘தர்ம சபா’ கூட்டம்:ஆயிரக்கணக்கில் போலீஸ் குவிப்பு

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று வலியறுத்தி விஸ்வ இந்து பரிஷத் நாளை தர்ம சபா கூட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயும் முதல்முறையாகக் குடும்பத்துடன் அயோத்தி நகருக்கு இரண்டுநாள் பயணமாக இன்று வந்துள்ளார்.

இதனால், அசம்பாவித சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கும் பொருட்டு ஆயிரக்கணக்கில் போலீஸார், கமாண்டோ படை, 5 கம்பெனி படைகள் குவிக்கப்பட்டுள்ளன.  

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோத்தி நகரில் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்று நீண்ட காலமாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சியும் இதே கோரிக்கையை  வலியுறுத்தி வருகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது பாஜகவும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது.

இந்நிலையில், அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தும் விதமாக நாளை விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ‘தர்ம சபா’ கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் விஎச்பி தொண்டர்கள், சாதுக்கள் என 2 லட்சம் பேர் வருவார்கள், அவர்களுக்காக 2 லட்சம் உணவுப் பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன என்று தர்ம சபா நடத்தும் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

உத்தவ் தாக்கரே வருகை

சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயும் முதல்முறையாகக் குடும்பத்துடன் அயோத்தி நகருக்கு இரண்டுநாள் பயணமாக இன்று வந்துள்ளார். இன்று மாலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் உத்தவ் தாக்ரே நாளை சிவசேனா நடத்தும் கூட்டத்தில் பேசுகிறார்.

அயோத்தியில் சிவசேனா சார்பில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி தனியாக பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மகாராஷ்டிராவில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்துள்ளார்கள். இதனால் அயோத்தி முழுமையும், சிவசேனா, விஎச்பி தொண்டர்கள் நிறைந்துள்ளனர்.

போலீஸார் குவிப்பு

இந்நிலையில், அயோத்தியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பணிகள் குறித்து போலீஸ் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “ அயோத்தியில் நாளை நடக்கும் தர்ம சபா கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்க இருப்பதால் பாதுகாப்புக்காக ஒரு கூடுதல் டிஜிபி, ஒரு துணை டிஐஜி, 3 மூத்த எஸ்பி.க்கள், 10 எஸ்பிக்கள், 21 டிஎஸ்பி, 160 இன்ஸ்பெக்டர்கள், 700 கான்ஸ்டபிள்கள், 42 கம்பெனி போலீஸார், 5 கம்பெனி ஆயுதப்படையினர், ஏடிஎஸ் கமான்டோக்கள், கண்காணிப்புக்காக டிரோன்கள் போன்றவை தயார் நிலையில் இருக்கின்றன ” எனத் தெரிவித்தார்.

அயோத்தி நகர மேயர் ரிஷிகேஷ் உபாத்யாயா நிருபர்களிடம் கூறுகையில், “ நகரில் நாளை நடைபெறும் கூட்டம் அமைதியாக நடக்கும் வகையில் போலீஸார்,மாவட்ட நிர்வாகம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு மட்டும் 13 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், சிவசேனா கட்சி நடத்தும் பேரணிக்கு எந்தவிதமான அனுமதியும் அரசு சார்பில் வழங்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

விஎச்பி அமைப்பின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் அம்புஜ் ஓஜா கூறுகையில், ‘‘அயோத்தியில் ராமருக்குத் தனியாக கோயில் எழுப்பும் காலம் நெருங்கிவிட்டது. ராம் லீலா சிலை எங்கு இருக்கிறதோ அங்குச் சிலை கண்டிப்பாகக் கட்டப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x