

நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதத்தின் போதும், எதிர்க்கட்சியினரைப் பார்த்தால் சிநேகமாக சிரிப்பார் மத்திய அமைச்சர் அனந்த் குமார். எளிய மனிதர்களும் எளிதாகச் சந்தித்துவிடும் அனந்த் குமாரின் திடீர் மறைவு கட்சி எல்லைகளைக் கடந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் பின்புலம் இல்லாத குடும்பத்தில் பிறந்த அனந்த் குமார் தேசிய அரசியலில் தொட்ட உயரங்கள் ஆச்சரியம் அளிப்பவை. கோடிக்கணக்கில் செலவு செய்தாலும் தேர்தலில் மண்ணைக் கவ்வும் சூழலில், தொடர்ந்து ஒரே தொகுதியில் 6 முறை வாகை சூடியிருக்கிறார். எத்தகைய பலம் வாய்ந்த வேட்பாளராலும் தோற்கடிக்க முடியாதவராக விளங்கிய அனந்த் குமாரை புற்றுநோய் தோற்கடித்திருக்கிறது.
பெங்களூருவில் உள்ள பசவன்குடியில் கடந்த 1959-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அனந்த் குமார், அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்தார். ஹூப்ளியில் கல்லூரி படிக்கும் போதே ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்து, ஏபிவிபி-யில் தீவிரமாக இயங்கினார். மைசூரில் சட்டம் படித்த போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த அவசர நிலையை எதிர்த்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டார். அதன் விளைவாக வழக்கும், சிறைவாசமும் வாய்த்தது.
கர்நாடகாவில் கட்சிப் பணி
அனந்த் குமார் ஏபிவிபி அமைப்பின் மாநிலச் செயலாளராகவும், தேசியச் செயலாளராகவும் இருந்த போது ஆயிரக்கணக்கான மாணவர்களை பாஜக பக்கம் திருப்பினார். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டே, முழு நேர அரசியலில் இறங்கினார். 1987-ல் அதிகாரபூர்வமாக பாஜகவில் இணைந்து, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுடன் கைகோத்து கர்நாடகாவில் கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார். இவரது திட்டமிட்ட செயல்பாடும், தொலைநோக்கான ஒருங்கிணைப்புப் பணிகளும் வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களை நெருங்கும் வாய்ப்பை வழங்கின.
தேசிய அளவில் கிளைகளைப் பரப்பிய அதே வேளையில், பெங்களூரு, மைசூரு, உடுப்பி, மங்களூரு உள்ளிட்ட இடங்களில் பாஜகவை அடிமட்ட அளவில் வேரூன்றும் பணிகளிலும் அனந்த் குமார் ஈடுபட்டிருந்தார். தென்னிந்தியாவில் பாஜக பெரிதாக வளராத அந்தக் காலகட்டத்தில் மிகுந்த அர்ப்பணிப்போடு களப்பணி செய்து கட்சியை வளர்த்தார். எடியூரப்பா சாமானியர்களுக்கான முகமாக இருந்த நிலையில், அனந்த் குமார் படித்தவர்களுக்கான முகமாக இருந்து பாஜகவை வளர்த்தார்.
ஆறு முறை அரியாசனம்
1996-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் முதல் முறையாக களமிறங்கிய அனந்த் குமார், 1 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தகவல் தொழில்நுட்பம் பெரிதாக வளராத 1998-ல் தன் பெயரில் தனி இணையதளம் தொடங்கி, தொகுதிவாசிகளுடன் தொடர்பில் இருந்தார். கடந்த தேர்தலில் தொழில்நுட்பத்தில் தேர்ந்த இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலகேனி அவருக்கு எதிராகக் களமிறங்கிய போதும் அனந்த் குமாரை வெல்ல முடியவில்லை. தொடர்ந்து 6 முறை ஒரே தொகுதியில் தொடர்ந்து வென்று, அனந்த் குமார் அரியாசனத்தைத் தக்க வைத்துக்கொண்டார்.
37 வயதில் நாடாளுமன்றத்தில் நுழைந்த அனந்த் குமார், அப்போதைய இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். அதே நேரத்தில் தன் முதிர்ச்சியான அணுகுமுறையால் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பிடித்தார். இதனால் இளம் கேபினெட் அமைச்சர் என்ற பெருமையும் பெற்றார். அத்வானியின் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்த அனந்த் குமாருக்கு பாஜகவில் தேசிய அளவிலான பொறுப்புகள் தேடி வந்தன.
2003-ல் கர்நாடக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட அனந்த் குமார், வட்டாரக் கட்சியாக இருந்த பாஜகவை மாநிலம் தழுவிய கட்சியாக மாற்றினார். மண்டலங்கள் தோறும் பேரணி, மாநாடு, பொதுக்கூட்டம், செயல்வீரர் ஆலோசனைக் கூட்டம் என புதுப்புது பெயரில் தொண்டர்களைத் திரட்டினார். இதன் விளைவாக சொற்ப எண்ணிக்கையில் வென்று கொண்டிருந்த பாஜக, 2006 தேர்தலில் அதிக இடங்களை (40) வென்று, கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
நழுவிய முதல்வர் நாற்காலி
அப்போது மஜதவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்கும் சூழல் ஏற்பட்ட போது அனந்த் குமாருக்கு முதல்வராகும் வாய்ப்பு வந்தது. அதற்கு மஜத தலைவர் குமாரசாமி, ''20 மாதம் பாஜகவுக்கு, 20 மாதம் மஜதவுக்கு''என ஒப்பந்தம் போடச் சொன்னார். அதனை மறுத்த அத்வானி, '' 5 வருடங்களும் அனந்த் குமார் முதல்வராக இருக்க ஆதரவு தேவை. முதல்வர் பதவியைப் பங்கிட முடியாது''என கறாராகக் கூறினார்.
அதற்கு குமாரசாமி தரப்பு நிபந்தனைகளுடன் ஒப்புக்கொள்ளத் தயாரான போது, எடியூரப்பா தன் 'லிங்காயத்து' அஸ்திரத்தைக் கையிலெடுத்தார். 'லிங்காயத்து எம்எல்ஏக்களே கட்சியில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அவர்களுடையே முழு ஆதரவு எனக்கு இருக்கிறது. எக்காரணம் கொண்டும் பிராமணரான அனந்த் குமாரை முதல்வராக்க மாட்டார்கள்' என பாஜக மேலிடத்துக்கு தூது அனுப்பினார். போதாக்குறைக்கு பெல்லாரி ரெட்டி சகோதரர்களையும் தனக்கு ஆதரவாக மாற்றிக் கொண்டார். இதனால் முதல்வர் நாற்காலி நழுவியது.
அடுத்த 2 ஆண்டுகளில் ஊழல் புகாரில் சிக்கி எடியூரப்பா சிறைக்குப் போக, அனந்த் குமாருக்கு மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு வந்தது. ஆனால், எடியூரப்பா தனது விசுவாசியான சதானந்த கவுடாவுக்கு முதல்வர் பதவியை வழங்கினார். ஒக்கலிகர் சாதியைச் சேர்ந்த சதானந்த கவுடா தனக்கு எதிராக மாறி, ஒக்கலிகருக்கு சாதகமாக நடந்துகொண்டதால் எடியூரப்பா அவரை முதல்வர் நாற்காலியில் இருந்து இறக்கினார். அப்போதும் அனந்த் குமாருக்கு முதல்வர் பதவியைத் தராமல், தன் சாதியைச் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டருக்கு முதல்வர் நாற்காலியை வழங்கினார் எடியூரப்பா.
மோடியின் மனதைப் பிடித்த அனந்த் குமார்
சாதி அரசியலின் காரணமாக முதல்வர் நாற்காலியைப் பிடிக்க முடியாத காரணத்தால் அனந்த் குமார் தேசிய அரசியலில் முழு ஆர்வத்தையும் காட்டினார். பாஜக தேசியச் செயலாளராக இருந்த போதும், பிஹார், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் பொறுப்பாளராகவும் இருந்த போதும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டார். இதனால் அத்வானியின் ஆதரவாளராக இருந்த போதும், மோடியின் மனதையும் பிடித்தார். எனவே மோடியின் அமைச்சரவையில் மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சரானார். சொந்தக்கட்சியினரை மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியினரையும் அனுசரித்துப் போவதால் நாடாளுமன்ற விவகாரத்துறையும் அனந்த் குமாரை தேடி வந்தது.
3 முறை மத்திய அமைச்சராக இருந்த அனந்த் குமார் விமானத்துறை, சுற்றுலாத்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை, கலாச்சாரம், நகர்ப்புற வளர்ச்சித்துறை உட்பட பல்வேறு துறைகளைக் கவனித்து வந்திருக்கிறார். அத்தனை துறைகளிலும் பெங்களூருவுக்கென்று ஏதேனும் சிறப்புத் திட்டங்களைச் செய்திடுவார். அதனாலே பெங்களூருவில் 6 முறை தொடர்ந்து வென்றார்.
மொத்தத்தில் பெங்களூருவின் 'டெல்லி பிரதிநிதி'யாகவும், டெல்லியில் 'பெங்களூருவாசியாகவும்' வாழ்ந்து மறைந்திருக்கிறார் அனந்த் குமார்.