

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மறைவு குறித்து விசாரித்த குழுவின் அறிக்கையை மத்திய அரசு வெளியிடாமல் உள்ளது.
அதை வெளியிடுமாறு அரசுக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மறைவு குறித்து விசாரித்த குழுவின் அறிக்கையை பகிரங்க மாக வெளியிடக் கோரி, வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, குரியன் ஜோசப், ரோஹின்டன் நரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜரான வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, ‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க உள்ளது. வரும் 16-ம் தேதி விருது வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.
இந்நிலையில், அவரது மறைவு குறித்து விசாரித்த குழுவின் அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடுவது அவசியம். எனவே, இதுகுறித்து தாக்கல் செய்துள்ள வழக்கை உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று வாதிட்டார்.
இக்கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இதுகுறித்து தனியாக மனு தாக்கல் செய்யும்படி எம்.எல்.சர்மாவுக்கு உத்தரவிட்டனர்.