

கடந்த அக்டோபர் மாதம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முயன்று பரபரப்பை ஏற்படுத்திய பெண் ஆர்வலர் ரெஹானா பாத்திமாவை போலீஸார் இன்று கைது செய்தனர்.
தனது ஃபேஸ்புக்கில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும், இரு பிரிவினருக்கு இடையே விரோதத்தைத் தூண்டும் வகையில் எழுதியதாகக் குற்றம் சாட்டி போலீஸார் ரெஹானாவைக் கைது செய்தனர்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அக்டோபர் மாதம், ஹைதராபாத்தைச் சேர்ந்த மோஜோ தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றி வரும் பத்திரிகையாளர் கவிதாவும், பெண்ணியவாதி ரெஹானா பாத்திமாவும் சபரிமலை சன்னிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தலுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர். ஆனால், பக்தர்கள், தந்திரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவர்களைக் கீழே இறக்கக் கேரள அரசு உத்தரவிட்டது. இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கொச்சியில் உள்ள போட் ரெட்டி பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கிளையில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றி வரும் ரெஹானா பாத்திமா பழரவிட்டம் நகரில் உள்ள கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் தனது ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ரெஹானா பாத்திமாக எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இன்று நண்பகல் 1 மணிக்கு பழவிரட்டம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கிளைக்குச் சென்ற போலீஸார் ரெஹானா பாத்திவை, ஃபேஸ்புக்கில் மத உணர்வுகளைப் புண்படுத்திய குற்றத்துக்காக கைது செய்தனர்.
இவர் மீது ஏற்கெனவே ஐபிசி 153(ஏ) பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தை ரெஹானா அணுகினார். ஆனால், முன் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் ரெஹானா பாத்திமாவைக் கைது செய்துள்ளனர்.
இன்று மாலைக்குள் ரெஹானா பாத்திமா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.