

கல்வியறிவு இல்லாவிட்டாலும் சமூக விழிப்புணர்வுடன் சமயோஜிதமாக செயல்பட்டு தன் தங்கைக்கு மேலும் நடக்கவிருந்த கொடுமைகளை இந்தச் சிறுவன் தடுத்திருக்கிறான்.
14 வயதே நிரம்பிய சிறுமி. திருமணம் எனும் போர்வையில் முதலிரவு அறைக்குள் பெற்றோராலே அனுப்பிவைக்கப்படுகிறாள். கண்முன் நிகழும் அந்தக் கொடுமையை காண சகித்தாத அவளது சகோதரன் போலீஸ் உதவியை நாடுகிறான்.
பெங்களூர் புது குருபன்னப்பாளையம் பகுதியில் இருந்த அந்த வீட்டில் இருந்து வெளியேறும் ரியாஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நரம்புகளில் கோபம் கொப்பளிக்க ஓட்டமும் நடையுமாக அருகில் இருந்த காவல் நிலையத்திற்குச் செல்கிறான்.
ரியாஸுக்கு படிப்பறிவு இல்லை. ஆனால், சமயோஜித புத்தி இருக்கிறது. அதனாலேயே குழந்தை திருமண குற்றத்தை போலீஸில் புகார் செய்ய முடிவு செய்து போலீஸை அணுகியுள்ளான்.
மைகோ லேஅவுட் போலீஸ் நிலையத்தை அணுகியபோது மணி இரவு 10. அங்கிருந்த காவலர்களிடம் கிட்டத்தட்ட காலில் விழுந்த ரியாஸ் நிலைமையை வேகமாக எடுத்துரைத்தான்.
சிறுவனுடன் விரைந்த போலீஸார், அந்த வீட்டில் அந்தக் கொடூரம் அரங்கேற ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கதவை படபடவென தட்ட வெளியே வருகிறார் ஒரு இளைஞர். 24 வயது மதிக்கலாம். பெயர் சையது முசமாயில். அவரை நகர்த்திவிட்டு உள்ளே சென்ற போலீஸ் அழுகையுடன் ஆடைகளை சரி செய்து கொண்டிருந்த சிறுமியைப் பார்த்ததுமே காலம் கடந்துவிட்டது புரிந்தது. இருந்தாலும், சிறுமியை மீட்டு குழந்தைகள் நல கமிட்டியின் உறுப்பினர்களிடம் ஒப்படைத்தனர்.
சையது முசமாயில், மீது போஸ்கோ சட்டம் பாயும் என போலீஸார் கூறுகின்றனர்.
முறையான கல்வி அறிவு இல்லாவிட்டாலும், அங்கும் இங்கும் கேட்ட சட்டத்திட்டங்களை நினைவில் கொண்டு ரியாஸ் தனது சகோதரிக்கு மேலும், மேலும் கொடுமை நடக்காமல் தடுத்துள்ளான்.
பெற்ற மகளையே துன்பத்திற்கு ஆளாக்கியவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குழந்தை திருமணங்களை, குழந்தைகளின் பெற்றோர்களுக்கு போதிய விழிப்புணர்வு வரும்வரை தடுக்க முடியாது. ஆனால், ரியாஸ் போன்று பிள்ளைகள் இருந்தால் சமூக குற்றங்கள் எதுவாக இருந்தாலும் தடுத்து நிறுத்தும் வாய்ப்பு உருவாகும்.